வட்டாட்சியர் பணியிடை நீக்கம்...ஆட்சியரைக் கண்டித்து வருவாய்த்துறையினர் போராட்டம்!

வட்டாட்சியர் பணியிடை நீக்கம்...ஆட்சியரைக் கண்டித்து வருவாய்த்துறையினர் போராட்டம்!
Published on
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை கண்டித்து தமிழ்நாடு முழுவதும், வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கள்ளக்குறிச்சியில் நீதிமன்ற உத்தரவின்படி, ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை தனி வட்டாட்சியர் மனோஜ் முனியன் தலைமையில் வருவாய்த்துறையினர் அகற்றினர். இதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, வட்டாட்சியர் மனோஜ் முனியனை, மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முழுவதும் வருவாய்த் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில், 200க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் வருவாய்த் துறை அதிகாரிகள் பணிகளைப் புறக்கணித்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டாட்சியர் கார்த்திகேயன் தலைமையில் வருவாய்த் துறை  அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வருவாய்துறை அலுவலர்கள் சங்கத்தினர்  பணிகளைப் புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அரசியல் தலையீடு காரணமாகவே வட்டாட்சியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக புகார் கூறி, காஞ்சிபுரம் மாவட்டம்  ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறையினர் பணிகளைப் புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் வருவாய்த் துறையினர், பணிகளைப் புறக்கணித்து, அறவழியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலக பணிகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com