எடப்பாடிக்கு கட்டம் கட்டும் அதிருப்தி அணி.. "அம்மாவின் சூளுரை" - சசிகலா வைத்த 'செக்'.. அதிமுக தொண்டர்களுக்கு சிக்னல்?

"தொண்டர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே எண்ணம் என்னவென்றால், இந்த இயக்கம் என்றைக்கு ஒன்றுபடும்.."
sasikala
Published on: 
Updated on: 
2 min read

அதிமுக 1972-ல் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. நாளை அக்டோபர் 17 அன்று அதிமுக தொடங்கி 55-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 55வது தொடக்க விழாவை கொண்டாடும் வகையில் சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் உட்கட்சி மோதல்கள் நிலவி, இரு அணியாக செயல்பட்டு வரும் நிலையில் இந்த விழாவை புறக்கணிக்க எஸ்.பி.வேலுமணி மற்றும் CV சண்முகம் தரப்பு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியானது. எஸ்.பி.வேலுமணி வீட்டில் தொடர்ந்து 3 நாட்களாக ஆலோசனை நடத்திய எஸ்.பி.வேலுமணி தரப்பு இந்த முடிவை ஆலோசித்து எடுக்கவும் கூறப்படுகிறது. வரும் 15ம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை இந்த கூட்டங்கள் நடைபெறும் என தலைமை அறிவித்திருந்த நிலையில் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் MLA-களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழத்தின் தலைவர் V K சசிகலா, தனது X தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவித்து தற்போது 54 ஆண்டுகளை நிறைவு செய்து, 55-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை கொண்டாடி மகிழும் கோடான கோடி தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.

1972 ஆம் ஆண்டு பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்களால் ஏழைகளுக்காகவே உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இந்த இயக்கத்தை தனது இறுதி மூச்சுவரை காப்பாற்றியவர் புரட்சித்தலைவர் அவர்கள். புரட்சித்தலைவரின் மறைவிற்கு பிறகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இந்த இயக்கத்தை கட்டி காப்பாற்றினார்கள். இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கினார்கள். இதில் எனது பங்கும் அடங்கியிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. நான் நேசித்த நம் இருபெரும் தலைவர்கள் தான்,நான் இந்த இயக்கத்தை சுவாசிக்க காரணமாக அமைந்தவர்கள். 

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மறைவிற்கு பிறகு இந்த இயக்கம் பல்வேறு சறுக்கல்களையும், தோல்விகளையும் தான் இன்று வரை சந்தித்து கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு சிலரின் சுயநலம் மற்றும் அவர்கள் எடுத்த தவறான முடிவுகள் தான் காரணமாக அமைந்துவிட்டது. இந்த இயக்கத்தின் பலனை அனுபவித்த ஒரு சிலர் மட்டும் ஏதாவது ஆதாயம் தேடி இயக்கத்தை விட்டு சென்று இருக்கலாம். ஆனால், அதே சமயம் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் வந்த தொண்டர்கள் இன்றைக்கும் நம்பிக்கையோடும், உறுதியோடும் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். தொண்டர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே எண்ணம் என்னவென்றால், இந்த இயக்கம் என்றைக்கு ஒன்றுபடும்.  பிரிந்து சென்றவர்கள், விலக்கப்பட்டவர்கள், ஒதுங்கி நிற்பவர்கள் என அனைவரும் ஒன்றிணையும் காலம் எப்போது? என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே, இது நாள் வரை “நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்” என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை மனதில் வைத்து தொண்டர்களின் எண்ணங்கள் ஈடேறிட அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டது. இதற்கு மேலும், வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால் இந்த இயக்கத்தை காப்பாற்றுவது மிகவும் கடினமாகிவிடும். 

“இன்னும் நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்” என்று எந்த நம்பிக்கையில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்தார்களோ, அந்த நம்பிக்கை என்றைக்கும் வீண் போய்விடக்கூடாது என்பதை மிகவும் வலியுறுத்தி கேட்டுகொள்கிறேன். இந்த இயக்கம்,ஒன்றுபட்ட, வலிமைமிக்க, பேரியக்கமாக மீண்டும் மலர வேண்டும் எனவும், மீண்டும் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் எனவும், தமிழக மக்களுக்கு மீண்டும் ஒரு பொற்கால ஆட்சியாக அது அமையட்டும் எனவும் இந்நாளில் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.

சசிகலாவின் இந்த பதிவு, அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி மோதல் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க அழைப்பு விடுப்பது போல இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் நிலவி வருகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, தலைமை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா போன்ற கேள்விகளும் உள்ளது. மேலும் பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் தோல்விக்கு கட்சி இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது, இத்தனையும் கருத்தில் கொண்டு இந்த பதிவில் அனைவருக்கும் அழைப்பு விடப்பட்டிருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com