புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லபாண்டியன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாநிலங்களவை எம்.பி. எம்.எம். அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் அரசியல் நிலவரம் குறித்தும், கட்சியின் தலைமை குறித்தும் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இந்த கூட்டத்தில் பங்கேற்ற சுமார் 3 ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணி தயார் செய்யப்பட்டது.
தலைவர்கள் எப்போது பேசி முடிப்பார்கள்? என வயிற்றை பிடித்தவாறே காத்திருந்த தொண்டர்கள் பந்தி போட்டவுடன் ஒருவரையொருவர் முண்டியடித்தனர். இதனால் கூட்டத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.
பந்தியில் இடம் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவத்தில் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டதால், கூட்டநெரிசலில் சிக்கி 2 பேர் மயங்கி விழுந்தனர்.
கட்சி விழாவில் தொண்டர்கள் பிரியாணிக்கு அடித்துக் கொண்ட இந்த சம்பவம் புதுக்கோட்டை மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.