
திராவிட முன்னேற்ற கழகத்தில், பொது செயலாளராக பதவி வகித்து வந்த பொன்முடி அவர்கள் சமீபத்தில் விழுப்புரத்தில் நடைபெற்ற, பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிலையில். அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்தும், சைவம், வைணவத்தை குறித்தும் சைவ வைணவ குறியீடுகளை குறித்தும் , மேலும் ஆபாசமாகவும் பேசி இருக்கிறார்.
இதற்கு முன்னரே இவர், வேறு ஒரு பொது நிகழ்ச்சியில் பெண்களை அவதூறாக பேசியும், திராவிட முன்னேற்ற கழகத்தின் திட்டமான, கட்டணமில்லா பேருந்து பயணம் குறித்து பெண்களிடம் "ஓசில தான போறீங்க" என்றும் பேசி இருக்கிறார், இதனால் இவருக்கு அதிக கண்டனம் எழுந்த நிலையில் இது குறித்து திமுக முக்கிய முடிவு எடுத்துள்ளது.
திராவிட முன்னேற்ற கழகத்தின், துணை பொது செயலாளர் பதவியிலிருந்த பொன்முடி அவர்களை நீக்கி உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், மேலும் இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள திமுக எம் பி கனிமொழி அவர்கள், "பொன்முடியின் சமீபத்திய பேச்சு பெரும் கண்டனத்திற்கு உரியது. அவர் எந்த காரணத்திற்காக இப்படி பேசியிருந்தாலும் ஆபாசமாக பேசியது தவறு" என தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிற கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், கட்சி இவரை பதவியில் இருந்து நீக்கியதே சரியான முடிவு என கட்சியின் இந்த செயலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.