தமிழ்நாட்டில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருவதற்கு முன்னர் திமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
பவள விழா கண்ட கட்சியான திமுக, 2026 பொதுத்தேர்தல் தோல்வியினால் கட்சியின் கட்டமைப்பை மறுசீராய்வு செய்தது. களத்துக்குச் சென்று நிலவரங்களைக் கண்டறிய 35 பேர் கொண்ட குழுவை அமைத்தார் கட்சியின் தலைவர் ஸ்டாலின். அவர்களின் ஆய்வறிக்கையின் அடிப்படையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒரு குழு அமைக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக செயற்குழுக் கூட்டத்தில், கட்சியை மறுகட்டமைப்பு செய்யும் வகையில் சில முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக, மாவட்டச் செயலாளர்களுக்கான வயது வரம்பு 70 ஆக நிர்ணயிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன், மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக அதிகரிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானங்களின்படி சில மூத்த மாவட்டச் செயலாளர்கள் பதவியை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியதால், சில நாட்களுக்கு அப்படியே ஒத்திவைக்கப்பட்டன.
எப்போது வந்தாலும் இந்த நடவடிக்கைகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்பதால், மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்குச் சாதகமாகக் காய்களை நகர்த்தி வந்தனர்.
இந்த நிலையில், 110 மாவட்டச் செயலாளர்கள் பட்டியலைத் தயாரிக்கும் வேலையைத் தீவிரப்படுத்தியிருக்கிறது கட்சித் தலைமை. இதையறிந்த எதிர்க்கட்சித் தலைவர், இளைஞரணியினருக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளார். தனக்குத் தோதான நபர்களின் பட்டியலையும் கொடுத்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.
இதற்கு இணையாக, மகளிர் அணிச் செயலாளர், தென் மாவட்டங்களில் புதிய மாவட்டச் செயலாளர்களைத் தன்னைக் கேட்காமல் தேர்ந்தெடுக்கக் கூடாது என்று வலியுறுத்தியிருக்கிறார்.
இதனால் இருவருக்கும் இடையே மறைமுகப் போட்டி எழுந்துள்ளது. சமீபத்தில் மகளிர் அணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உதயநிதியின் படங்கள் எதுவும் இடம்பெறாமல் பார்த்துக்கொண்டார். இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
மூத்த மாவட்டச் செயலாளர்கள் ஏற்படுத்தும் வெற்றிடங்களைக் குறிவைத்தே அதிகார மையங்களுக்கு இடையே போட்டி பலமாகியிருக்கிறது. இதனுடன், மற்ற மாவட்டச் செயலாளர்களும் தங்களது பரிந்துரைகளைப் பரிசீலிக்க வேண்டும் எனக் கோரி வருவதால், மூன்று முனை அழுத்தத்தில் முடிவெடுக்க முடியாமல் குழம்பியிருக்கிறது தலைமை.
என்ன ஆனாலும் இளைஞரணியினர் சிலருக்கு வாய்ப்பு கொடுத்தே ஆக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உறுதியாக இருப்பதால், அவரது முயற்சிக்குப் பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முடிவு மாவட்டச் செயலாளர்கள் அறிவிப்பில் தெரியவரும்.
5 தொகுதிகளில் வரப்போகும் தேர்தல்கள் திமுகவுக்கு மிக மிக முக்கியமானவை. மாவட்ட செயலாளர்களை அறிவித்தால் யாரையாவது சமாதானப்படுத்த வேண்டியிருக்கும் என்பதனால் தேர்தல் முடியும் வரை காத்திருக்கலாமா என்றும் தலைமை ஆலோசித்து வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்