டெல்லியில் எமர்ஜென்சி.. "பயந்து நடுங்கும் Dummy முதலமைச்சர்" - திமுக கடும் கண்டனம்!

துருவ் ரதி அவரது குருகிராம் இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டித்துள்ளார்.
DMK Slams State Govt Over Youth Arrests: Calls CM a "Dummy" Cowering in Fear
டெல்லியில் அராஜகம்.. "பயந்து நடுங்கும் Dummy முதலமைச்சர்" - திமுக கடும் கண்டனம்!
Published on: 
Updated on: 
1 min read

டெல்லி, ஜந்தர் மந்தரில் இளைஞர்களின் போராட்டத்தை தடுக்க 25000 காவலர்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளது மத்திய அரசு. போராட்ட களத்துக்கு வருபவர்களை கைது செய்ய பெரும் படை குவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தின் முக்கிய முகங்களாக இருக்கும் கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் தலைவர் ஆபீஜித் தீபக்கே, சௌரவ் தாஸ், அசுதோஷ ரங்கா உள்ளிட்டோர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துருவ் ரதி அவரது குருகிராம் இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "இன்று டெல்லியில் நடக்கும் சம்பவங்களும், அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் போராளிகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்குமுறையின் அளவும், நான் கடந்து வந்த நெருக்கடி நிலை (எமர்ஜென்சி) காலத்தின் வேதனையான நினைவுகளை மீண்டும் நினைவூட்டுகின்றன.

டெல்லியிலும் நாடு முழுவதிலும் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து அரசியல் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் இளம் போராட்டக்காரர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

பாஜகவின் நீட்சியாக செயல்பட்டு, போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு எதிராக காவல்துறையின் அடக்குமுறையை ஏவிவிட்டுள்ள தமிழகத்தில் உள்ள தவெக (TVK) அரசை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஜனநாயக ரீதியில் போராடும் உரிமையை அமைதியான வழியில் பயன்படுத்தும் இளைஞர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். எதிர்ப்புக் குரல் பதிவு செய்வது குற்றமல்ல; அதை தற்காத்துக்கொள்ளக் குரல் கொடுப்பவர்களை நசுக்குவதன் மூலம் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்க முடியாது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமா விவாதிக்க முடியாத ஒன்றாகும். அவரது ராஜினாமாவைத் தாண்டி, தேர்தல் ஆணையத்தின் நிறுவன அமைப்பிற்கு ஏற்படுத்தப்பட்ட அனைத்துப் பாதிப்புகளும் சரிசெய்யப்பட்டு, அதன் சுதந்திரமும் நடுநிலைமையும் மீட்டெடுக்கப்பட வேண்டும்." எனக் கூறியுள்ளார்.

மேலும் தமிழ்நாடு சட்டமன்ற எதிரிக்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று பெசன்ட் நகரில் அமைதியாக போராடிய இளைஞர்கள் மீது காவல் அராஜகத்தை ஏவி கைது செய்துள்ள இந்த Sofa Model அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

ஒட்டுமொத்த நாடும் - இவர்கள் கூட்டணி வைத்திருப்பதாக சொல்லிக்கொள்ளும் சில கட்சிகளும் கூட இந்தப் போராட்டத்தை ஆதரிக்கும் போது, இந்த Dummy முதலமைச்சர், யாருக்கு பயந்து நடுங்கி இந்தப் போராட்டத்தை நசுக்குகிறார்.

சுயமரியாதையும் - நாட்டின் மீதும் அக்கறையும் கொண்ட அறிவார்ந்த இளைஞர்களை கைது செய்வதன் மூலம், டெல்லியின் அறிவிக்கப்படாத அடிமை என்பதை இந்த முதலமைச்சர் நிரூபித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை உடனே விடுக்க வேண்டும். ஜனநாயகத்தைக் காப்பாற்றத் துடிக்கும் இளைஞர் படையின் குரலை ஒடுக்குவதை ஏற்கமுடியாது." எனக் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com