"எங்கள் தொழிலை அழித்துவிட்டு.. அடுத்த தொழிலை கொண்டு வராதீர்கள்"- கப்பல் கட்டும் தளத்திற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு!

கப்பல் மட்டும் தளம் அமைப்பதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
Salt manufacturers association
Salt manufacturers association
Published on
Updated on
2 min read

தூத்துக்குடி அருகே அமைந்துள்ளது முள்ளக்காடு, கோவளம், பழைய காயல் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் உப்பளம் மற்றும் மீன்பிடி தொழிலையே நம்பியுள்ளது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள், கோவளம் பசுவந்தரை தன்பாடு உப்பு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உப்பு தொழிலை நம்பி சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் உப்பள தொழிலாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இந்த பகுதியில் தமிழக அரசின் சிப்காட் நிறுவனம் மூலம் சுமார் 3000 ஏக்கர் இடங்கள் கையகப்படுத்தப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு கப்பல் கட்டும் தளம் அமைக்க நிலம் தாரை வார்க்கப்பட உள்ளது என்ற செய்தி பரவியதையடுத்து, இதற்காக உப்பு உற்பத்தியாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட உப்பு உற்பத்தியாளர்கள், உப்பள தொழிலாளர்கள், மீனவர்கள் ஆகியோர் "தமிழக வெற்றிக்கழக அரசு, கப்பல் கட்டும் தளத்தை எங்கள் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு கொண்டு வரக்கூடாது". மேலும், கப்பல் மட்டும் தளம் அமைப்பதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் தமிழக வெற்றி கழக அரசு உப்பு தொழிலை, மீன்பிடி தொழிலை அழித்துவிட்டு கப்பல் கட்டும் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் கப்பல் கட்டும் தளத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி அறவழியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, பேசிய உப்பு உற்பத்தியாளர் இசக்கிமுத்து, இந்த அளம்தான் எங்களின் உயிர் மூச்சு என்றும், இதை அவர்களின் மூதாதையர்கள் தொடங்கி தலைமுறை தலைமுறையாக இந்த தொழிலை செய்து வருவதாக கூறியுள்ளார். மேலும், கடந்த திமுக ஆட்சியில் கப்பல் காட்டும் தளம் அமைக்கப்போவதாக கூறியபோது, தவெக-வினர் தொழிலாளர்களுக்காக போராடியதாகவும், ஆனால் தற்போது இதற்காக எதுவும் பேசவில்லை என்றும் கூறியுள்ளார். தற்போது இந்த விஷயத்தை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் கூறினார். மேலும், "எங்கள் தொழிலை அழித்துவிட்டு அடுத்த தொழிலை கொண்டு வராதீர்கள்; எங்கள் தொழில் எங்களுக்கு பெரியது" என்று பேசினார்.

இதனையடுத்து, கோவளம் பசுவந்தரை தன்பாடு உப்பு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் மந்திரமூர்த்தி, 3 தலைமுறைகளாக தங்கள் இந்த தொழிலை செய்வதாகவும், முந்தைய அரசு கொண்டுவந்த இந்த கப்பல் காட்டும் தளத்தை தற்போதைய அரசு செயல்படுத்துவதாகவும் அவர் கூறினார். மேலும், "முந்தைய அரசுதான் வாழ்வாதாரத்தை குலைப்பதற்கான வேலைகளை செய்தது; இந்த அரசாவது எங்களை கருத்தில் கொண்டு செயல்படவேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தமிழக அரசு தங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com