
விழுப்புரம் கெடார் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் மனைவி பத்மாவதி. இவரது ஐந்தரை ஏக்கர் நிலத்தை கடந்த 1999-ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் ஆதிதிராவிடர் நலத்துறையினர் எடுத்துக் கொண்டனர். இதற்கான தொகையாக ஏக்கருக்கு 1 லட்சத்து 55 ஆயிரம் பணம் வழங்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் எந்த ஒரு தொகையும் வழங்காததால் மன உளைச்சலுக்கு ஆளான பத்மாவதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், பத்மாவதிக்கு 24 லட்சம் வழங்குமாறு உத்தரவிட்டு, பின்பு கால தாமதம் ஏற்பட்டதால் வட்டியுடன் சேர்த்து 48 லட்சம் வழங்க கூறியிருந்தது.
ஆனால் இதுவரை 37 லட்ச ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால் பத்மாவதி நீதிமன்றத்தை அணுகிய நிலையில் இன்று மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த நீதிமன்ற ஊழியர்கள் அங்குள்ள பொருட்களை ஜப்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சிக்குள்ளான அதிகாரிகள் 10 நாட்களுக்குள் மீதமுள்ள தொகையை கொடுத்து விடுகிறோம் என சமாதானம் பேசியதையடுத்து, ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.