தி.மு.க. ஆட்சிக்கு எதிராக ஆளுநரிடம் புகார் அளிப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுகவினர் பேரணியாக சென்றனர்.
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்ததையடுத்து, தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக அ.தி.மு.க. குற்றம் சாட்டி வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து புகார் அளிப்பதற்காக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் பேரணியாக சென்றனர். சின்னமலையில் இருந்து ராஜ்பவன் வரை நடந்த இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து அதிமுக பொது செயலாளர் ஈபிஎஸ் புகார் மனு அளித்தார். தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கம், சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு, விஷ சாராய மரணங்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக அதிமுகவினர் நடத்திய பேரணியால் சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக சென்னையின் பிராதான பகுதிகளான அண்ணாசாலை, கிண்டி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.