

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது தமிழக வெற்றிக் கழகம்.
வெற்றியைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "ஆதிமுகவின் 60 சதவீத வாக்குகள் தவெகவிற்கு வந்திருக்கிறது. ஏனென்றால் ஆதிமுகவும் திமுகவும் சேர்ந்து தவெகவை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தனர்.
அதனால் தான் எடப்பாடி பழனிசாமி "திமுகவும் ஆதிமுகவும் நல்லாட்சி கொடுத்தது" என பேசினார். எடப்பாடி பழனிசாமியின் பொய் பிரச்சாரங்கள் ஆதிமுக தொண்டர்களுக்கு புரிந்ததால் தான் இன்றைக்கு தமிழக வெற்றிக் கழகம் வெற்றி அடைந்திருக்கிறது." எனப் பேசினார்.
மேலும் அவர், "அதிமுகவில் 1,300 ஒன்றிய செயலாளர்கள் இருக்கிறார்கள்; கிளைக்கழக செயலாளர்கள் 12,000–13,000 பேர் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட அதில் 70 சதவீதம் ஒன்றிய செயலாளர்கள் எங்களை கடந்த 10 நாட்களாக தொடர்பு கொண்டு இருக்கிறார்கள். அதிமுகவின் ஒன்றிய, கிளைக்கழகம் உள்ளிட்ட ஒட்டுமொத்த கட்டமைப்பையும் நாங்கள் வரவேற்கிறோம்.
உண்மையான எம்.ஜி.ஆர் விசுவாசிகளும், அம்மாவின் விசுவாசிகளும் பழனிசாமி அவர்களை விடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி வர ஆரம்பித்து விட்டார்கள்." என்றார்.
தொடர்ந்து, "ஏற்கனவே மாவட்ட செயலாளர்கள் வர ஆரம்பித்து விட்டார்கள். அடுத்து ஒட்டுமொத்த கட்சியின் ஒன்றிய செயலாளர்கள், கிளைக்கழக செயலாளர்கள், நகர செயலாளர்கள் அனைவரும் தமிழக வெற்றிக் கழகத்தைத்தான் அம்மா உருவாக்கிய, எம்.ஜி.ஆர் உருவாக்கிய ஆதிமுகவாக பார்க்கிறார்கள். எங்களுடைய தலைவர் விஜய் அவர்களை எம்.ஜி.ஆராக பார்க்கிறார்கள்; தைரியத்தில் அம்மாவாக (ஜெயலலிதா) பார்க்கிறார்கள்." என்றார்.
காங்கிரஸ் கட்சியுடன் அதிமுகவை ஒப்பிட்ட ஆதவ் அர்ஜுனா, "1972-ல் கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆர், 1977-ல் வெற்றி பெறுவாரா என்ற ஒரு கேள்வி இருந்தது. அப்போது காங்கிரஸினுடைய வாக்கு வங்கி 40 சதவீதம் இருந்தது.
எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய பிறகு, காங்கிரஸினுடைய அந்த 40 சதவீத வாக்குகள் அப்படியே எம்.ஜி.ஆரிடம் வந்தது; காங்கிரஸ் நிர்வாகிகள் எம்.ஜி.ஆரிடம் சென்று சேர்ந்தார்கள்.
அந்த வரலாறு மீண்டும் நடப்பதாகத்தான் நான் பார்க்கிறேன். அப்போது இருந்த பக்தவத்சலம் அவர்கள் தான் இப்போது இருக்கும் எடப்பாடி.
பக்தவத்சலம் இருந்தபோதுதான் காங்கிரஸின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் எம்.ஜி.ஆரிடம் போய் சேர்ந்தார்கள்.
அம்மாவின் தொண்டர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டார்கள். அதிமுகவின் அடிப்படைத் தொண்டர்களும் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.
பலரும் இணைவதற்குக் கோரிக்கை கொடுத்துள்ளனர்; அதை நாங்கள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். எப்படி பக்தவத்சலம் அவர்களின் தலைமையால் காங்கிரஸ் வீழ்ந்து, காங்கிரஸின் வாக்கு வங்கி எம்.ஜி.ஆரிடம் சென்றதோ, அதே மாதிரியான நிகழ்வு இந்த இடைத்தேர்தல் மூலம் நடந்திருக்கிறது.
இபிஎஸ் அவர்களுக்கு ஒரு ஓட்டு கூட கிடையாது. இப்போது வரை இரட்டை இலையினால் தான் ஓட்டு இருக்கிறது. மக்களும் தொண்டர்களும் அவர் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள்.
விரைவில் பழனிசாமியின் அதிமுக, திமுகவுடன் சேரும். பழனிசாமிக்கு தேர்தல் கணக்கு தெரியாது. திமுக வாங்கிய ஓட்டும் அதிமுக வாங்கிய ஓட்டும் சேர்ந்து தேர்தலில் ஜெயித்து விடலாம் என நினைப்பார்.
ஆனால், அதிமுக தொடங்கியதே திமுக எதிர்ப்பு மனநிலையில் தான். அவங்க ரெண்டு பேரும் சேரும்போது வாக்கு வங்கி தவெக பக்கம் வந்துவிடும், இபிஎஸ் காணாமல் போய்விடுவார்.
தாராபுரத்தில் தோற்றுவிடுவோம் என்று சொல்லப்பட்டபோது கூட, ஓட்டுக்கு பணம் கொடுக்காத அமைச்சர்களையும் கட்சியையும் எங்கள் முதலமைச்சர் உருவாக்கியிருக்கிறார். நாங்கள் எப்பொழுதும் நேர்மையாக இருப்போம்." என்றார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்