
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களின் வெற்றியை உறுதி செய்ய பம்பரமாக சுழன்று கொண்டு இருக்கின்றன. ஆளுங்கட்சியான திமுக ஆட்சிக் கட்டிலிருந்து இறங்கத் தயாராக இல்லை. அவர்களின் கூட்டணிக்குள் சலசலப்புகள் இருந்தாலும் அது இன்னும் பொதுவெளிக்கு வரவில்லை. ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக -வின் சண்டை மூலைமுடுக்குகளில் எல்லாம் பேசுபொருளாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் 11 அதிமுக -வும் பாஜக -வும் தங்களின் கூட்டணியை உறுதி செய்தன. ஆனால் கூட்டணி வைத்த நாளிலிருந்தே அதிமுக -பாஜக கூட்டணி அடிமட்ட அளவில் ஒன்றிணையவில்லை என்ற கூற்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் அதையெல்லாம் சரிசெய்து இப்போதுதான் இரு கட்சிகளும் தங்களின் ஒற்றுமையை உறுதி செய்து வருகின்றனர். ஆனால், சமீபத்தில், NDA கூட்டணியிலிருந்து ஒவ்வொருவராக கழன்றுகொண்டு வரும் போக்கும் நிகழ்கிறது..
முதலில் ‘சுயமரியாதை’ தான் முக்கியம் எனக்கூறி ஓபிஎஸ் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து ‘துரோகிகள் திருந்தமாட்டார்கள்’ எனக்கூறி டிடிவி தினகரனும் வெளியேறினார். கடைசிவரை கட்சிக்கு விசுவாசமாக இருந்த செங்கோட்டையனும் இபிஎஸ் கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் எனக்கூறி கெடு விதித்திருந்தார். இது போதாது என்று சசிகலா -வும் கட்சி ஒன்றிணைய வழி செய்யுங்கள் என இபிஎஸ் -க்கு அழைப்பு விடுத்தார். ஆனால் எடப்பாடி யாரையும் கண்டுகொள்வதாக இல்லை. அதிமுக என்றால் அது நான் மட்டும்தான் என்பதில் மிகத்தெளிவாக இருந்தார். பாஜக தலைமையும் அதையேத்தான் உறுதி செய்தது. ஆனால் டிடிவி, செங்கோட்டையன், சசிகலா, ஓபிஎஸ் இவர்கள் அனைவரும் ஒருசேர எதிர்ப்பது எடப்பாடி தலைமையை என்பதுதான் நிதர்சனம்.
இந்நிலையில், இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், கூவத்தூரில் நடந்த சில விஷயங்கள் குறித்து உடைத்து பேசியிருந்தார். "சாத்தான் வேதம் ஓதுவது போல” நன்றியைப் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். மற்ற கட்சியைச்சேர்ந்தவர்களும் தமிழக மக்களும் முட்டாள் என நினைத்து எடப்பாடி பேசி வருகிறார்.
துரோகத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாத பழனிச்சாமி, நன்றியைப் பற்றிப் பேசுகிறார். கூவத்தூரில் எம்.எல்.ஏ -க்கள் தங்க வைக்கப்பட்டு வாக்களித்ததுதான் எடப்பாடி முதல்வராகக் காரணம். அப்போது கூட “நான்தான் முதல்வர் எனச் சொன்னால் எம்.எல்.ஏ -க்கள் பலரும் ஆதரவு கடிதத்தில் கையெழுத்து போட மாட்டார்கள்..கையெழுத்துகளை வாங்கிய பிறகு அதைச் சொல்லுங்கள் எனச் சொன்னவர் எடப்பாடி பழனிசாமி. அவர் நன்றி மறந்தவர். இன்று, அவர் ஜெயலலிதா இறந்தபோது பாஜக தான் அதிமுக -வை காப்பாற்றியது என பேசிக்கொண்டிருக்கிறார். அன்று எடப்பாடியை முதல்வராக்கியது பாஜக இல்லை. அந்த 122 எம்.எல்.ஏ -க்கள் தான்.எடப்பாடி எப்போதும் முகமூடி மனிதர்தான். அவருக்கு துரோகத்தை தவிர வேறு எதுவும் தெரியாது” என தினகரன் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதனை தொடர்ந்து எடப்பாடி -யும் “துரோகிகளை ஒருபோதும் கட்சியில் சேர்த்துக்கொள்ள முடியாது. ஒருவர் அதிமுக -வினரின் கோவிலான அதிமுக தலைமை அலுவலகத்தை அடித்து உடைத்தவர். இன்னொருவர் கட்சிக்கே துரோகம் செய்தவர். துரோகிகளை எப்படி சேர்த்துக்கொள்ள முடியும்” என பதிலுக்கு பேசியிருந்தார்.
இந்த சூழலில்தான் தொடர்ந்து டிடிவி தினகரன் எடப்பாடியை கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் கூவத்தூரில் நடந்த அரசியலை பொதுவெளியில் போட்டு உடைத்தது பழனிசாமிக்கு ஒரு ‘setback’ தான்.
இந்நிலையில் நேற்று பழனிச்சாமி உள்துறை அமைச்சர் அமித்ஷா -வை சந்தித்திருந்தார். அப்போது டிடிவி, செங்கோட்டையன் உள்ளிட்டோரை சந்திக்க வேண்டாம் என அமித்ஷா -விடம் எடப்பாடி கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அமித்ஷா -வை சந்தித்துவிட்டு வெளியே வரும்போது முகத்தை மூடிக்கொண்டு, செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றதை கடுமையாக விமர்சித்திருக்கிறார் டிடிவி தினகரன்.”இதுவரை எங்காவது கேள்வி பட்டிருக்கிறீர்களா? கூட்டணிக் கட்சி தலைவரை சந்திக்கும்போது முகமூடி அணிந்து சென்றதை எங்காவது பார்த்திருக்கிறீர்களா?? எனக்கு சொல்லப்பட்டது என்னவென்றால் கூட வந்தவர்களை முன்னாடியே அனுப்பிவிட்டு இவர் மட்டும் தனியாக எதோ பேசிவிட்டு வந்துள்ளார் என்று. என்ன பேசினார் என்பது எடப்பாடியாருக்குத்தான் வெளிச்சம். ஆனால் பழங்காலத்தில் மன்னர்கள் எதாவது சாதனை செய்தால் அவருக்கு புனைப்பெயர் வைப்பதுபோல, இனிமேல் நாம் எடபடியாரை “முகமூடி எடப்பாடி” என அழைக்கலாம்” என பேசியிருந்தார்.
இவ்வாறு தினமும் ஊடகத்தின் முன்பு தோன்றி எடப்பாடி இமேஜ் -ஐ காலி செய்யும் டிடிவி தமிழக வெற்றி கழகத்தோடு இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு காரணமும் அவர் பேசிய வார்த்தைகள் தான். இதே போன்றொரு சமீபத்திய பிரஸ் மீட்டில் “நாங்கள் கூட்டணி வைக்கும் கட்சிதான் ஆட்சியை பிடிக்கும்.. இதை நீங்கள் சூசகமாக புரிந்துகொள்ளுங்கள்” என பேசியிருந்தார். இதில் சூசகமாக புரிந்துகொள்ள ஒன்றுமில்லை. இனிமேல் NDA -கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை. திமுக -வில் ஏற்கனவே ஹவுஸ் புல் -ஆகி வழிந்து கொண்டிருக்கிறது. காலியாக இருக்கக்கூடிய ஒரே இடம் விஜய் மட்டும்தான். போதாக்குறைக்கு விஜய் கையிலெடுத்த எம்.ஜி.ஆர் அரசியலையும், அவருக்கு கூயோடும் கூட்டத்தையும் பார்த்தால் டிடிவி தினகரன் அங்குதான் போய் சேருவார் போல தெரிகிறது.ஆனால் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.