
காரைக்குடி அரசு மருத்துவமனையில் புதிதாக திறக்கப்பட்ட கொரோனா மையத்தில் மூச்சுத் திணறலால் 8 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சூரக்குடி சாலையில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் 10 புள்ளி 5 கோடி ரூபாய் செலவில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடம் கட்டப்பட்டது. அங்கு கொரோனா தாக்கம் அதிகரித்ததை அடுத்து, கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்ட அக்கட்டிடத்தில் மொத்தமுள்ள 300 படுக்கைகளில் 200 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டது.
கடந்த 26ஆம் தேதி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இந்த மையத்தை திறந்து வைத்த நிலையில், நேற்று இரவோடு இரவாக காரைக்குடி பழைய மருத்துவமனை கொரானா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 50 பேர் மற்றும் புதிதாக 60 பேர் என மொத்தம் 110 பேர் இந்த மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து அதிகாலையில் இருந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு 8 பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததாகவும், ஆக்சிஜன் சீராக கிடைக்காத காரணத்தாலேயே உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
பின்னர் கொரோனா மையத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, 3 பேர் மட்டுமே இறந்துள்ளதாகவும், தனியார் மருத்துவமனைகளில் இருந்து அதிகளவில் சிகிச்சைக்கு வருவதால் ஆக்சிஜன் படுக்கைகளில் 179 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்ததோடு, 230 டன் திரவ ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளதால், ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளார்.