"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் திருவாடானை தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதியான திருவாடானை, விவசாயம் சார்ந்த கிராமப்புறப் பின்னணியைக் கொண்டது. ரத்தின ரத்தினீஸ்வரர் கோயில் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளங்களைக் கொண்ட இந்தத் தொகுதியில், கடந்த காலங்களில் சபாநாயகர் சுப. தங்கவேலன் மற்றும் கருணாஸ் போன்றோர் பிரதிநிதித்துவப்படுத்திய நிலையில், தற்போதைய அரசியல் களம் பெரும் மாற்றங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
திருவாடானை தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களை ஆய்வு செய்ததில், இங்கு நடுத்தர மற்றும் மூத்த வாக்காளர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் 12.6 சதவீதமும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 30.7 சதவீதமும் உள்ளனர். 41 முதல் 60 வயதுடையவர்கள் 38.2 சதவீதமாகவும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 18.37 சதவீதமாகவும் உள்ளனர். சமுதாய ரீதியாக முக்குலத்தோர் 29 சதவீதம் பேர் முதன்மையாக உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாகத் தேவேந்திர குல வேளாளர் 20 சதவீதம், யாதவர்கள் 10 சதவீதம், செட்டியார் 10 சதவீதம் மற்றும் முஸ்லிம்கள் 6 சதவீதம் எனப் பரவலாக உள்ளனர். இது முழுக்க முழுக்கக் கிராமப்புறங்களை மையமாகக் கொண்ட ஒரு தொகுதியாகும்.
இங்கு நிலவும் முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாகக் கிராமப்புறங்களுக்கான இணைப்புச் சாலைகள் மிகவும் மோசமாக இருப்பது பொதுமக்களுக்குப் பெரும் தலைவலியாக உள்ளது. பல குக்கிராமங்களில் ரேஷன் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் இல்லாததால் மக்கள் பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை நீடிக்கிறது. வறட்சியான மாவட்டம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு இங்குத் தீராத பிரச்சினையாக உள்ளது. காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கையாக உள்ளது. மேலும், அரசு சார்பில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதும், தாலுகா மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்பதும் மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
திருவாடானை தொகுதியில் வெல்லப்போகும் வேட்பாளர் யார்? தெரிந்து கொள்ள : இங்கே கிளிக் செய்யவும்
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, திமுக கூட்டணி (காங்கிரஸ்) சார்பில் போட்டியிட்ட கருமாணிக்கம் 39.9 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவின் ஆணிமுத்து 32.4 சதவீத வாக்குகளையும், அமமுகவின் வி.டி.என். ஆனந்த் 16.5 சதவீத வாக்குகளையும் பெற்றனர். நாம் தமிழர் கட்சி 8.18 சதவீத வாக்குகளைப் பெற்றது. அந்தத் தேர்தலில் திமுக 130 பூத்களில் வலுவாகவும், 146 பூத்களில் பலவீனமாகவும் இருந்தது. அதிமுக 150 பூத்களில் வலுவாகவும், 170 பூத்களில் பலவீனமாகவும் இருந்த நிலையில், சுமார் 68 பூத்கள் ஸ்விங் நிலையில் இருந்தன. தொடர்ந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நவாஸ்கனி 47 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றிருந்தாலும், அதிமுக கூட்டணி 120 பூத்களில் சவாலான வாக்குகளைப் பெற்றிருந்தது.
தற்போது 'கான்சிலிடிக்ஸ்' குழுவினர் நடத்திய 2026 தேர்தல் கணிப்பின்படி, திருவாடானை தொகுதியில் அதிமுக கூட்டணி மீண்டும் தனது ஆதிக்கத்தைச் செலுத்த வாய்ப்புள்ளது. வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி 41 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆளும் திமுக கூட்டணி 35 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட வாய்ப்புள்ளது. தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மற்ற அணிகள் இணைந்து சுமார் 20 சதவீத வாக்குகளைப் பிரிக்கக்கூடும் (நாம் தமிழர் 10% வரை பெற வாய்ப்புள்ளது). பூத் வாரியான தரவுகளின்படி, தற்போது அதிமுக 189 பூத்களில் வலுவான நிலையில் உள்ளதாகவும், திமுக 163 பூத்களில் வலுவாக உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இந்தத் தொகுதியில் அதிமுக மற்றும் திமுக இடையேயான வெற்றி வித்தியாசம் சுமார் 6 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் அடிப்படைத் கட்டமைப்பு இந்தத் தொகுதியில் மிக வலுவாக இருப்பதும், அமமுக உள்ளிட்ட கூட்டணிக் கணக்குகளும் அதிமுகவிற்குச் சாதகமாக அமையக்கூடும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.