ஆவடியில் அமைச்சர் நாசரின் மகுடம் நீடிக்கும்? 2026-ல் வெற்றி யாருக்கு? இந்த தொகுதியிலும் ஆட்டம் காட்டும் விஜய்!

ஒரு மாநகராட்சியாக இருந்தும் ஆவடியில் ஓர் அரசு கலைக் கல்லூரி கூட இல்லை என்பது இளைஞர்களின் நீண்டகால ஏக்கமாகும்...
avadi
avadi
Published on
Updated on
2 min read

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து வழங்கும் "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் 2வது தொகுதியாக ஆவடி தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு நிலவப்போகும் அரசியல் சூழல் குறித்த தகவல்களும் இங்கே விரிவான தரவுகளுடன் தொகுக்கப்பட்டுள்ளது. ஆவடி ஒரு மாநகராட்சியாகவும், அதே சமயம் ஆறு மிகப்பெரிய ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்களைக் கொண்ட ஒரு தனித்துவமான 'காஸ்மோபாலிட்டன்' தொகுதியாகவும் விளங்குகிறது. இங்குப் புதிதாகக் குடியேறிய நடுத்தர வர்க்கத்தினர், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் ராணுவத் தொழிலாளர்களின் வாக்குகள் வெற்றியின் திசையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்களில் 48.5% பேர் இளைஞர்கள் என்பதும், 21% பேர் சிறுபான்மையினர் என்பதும் கவனிக்கத்தக்கது. குறிப்பாக 18 முதல் 40 வயதுடைய இளைஞர்களின் வாக்குகள் இந்த முறை புதிய அரசியல் மாற்றத்திற்கு வித்திடப் போவதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

avadi voters list
avadi voters list

தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களைப் பொறுத்தவரை, 18 முதல் 40 வயதுடைய இளைஞர்கள் 48.5% பேர் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் புதிய மாற்றத்தை விரும்பக்கூடியவர்களாக இருப்பதால், விஜய்யின் தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு இவர்களின் ஆதரவு அதிகமிருக்க வாய்ப்புள்ளது. ஆவடி தொகுதியில் 9% முஸ்லிம் வாக்காளர்களும், 12% கிறிஸ்தவ வாக்காளர்களும் உள்ளனர். மதம் மாறிய சிறுபான்மையினரையும் சேர்த்தால் இது 30 சதவீதத்தைத் தாண்டும். கடந்த தேர்தலில் பிஜேபியின் தாக்கம் மற்றும் மத்திய அரசின் ராணுவ நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்ற அச்சம் காரணமாக, இந்த வாக்குகள் ஒட்டுமொத்தமாக திமுகவிற்குச் சாதகமாகத் திரும்பின. இப்போதும் அதே நிலை நீடிக்குமா என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

ஆவடி தொகுதியின் முழு கருத்து கணிப்பு பற்றி தெரிந்து கொள்ள : இங்கே கிளிக் செய்யவும்
avadi problem
avadi problem

உள்ளூர் பிரச்சனைகளைப் பொறுத்தவரை, 15 ஆண்டுகளாக முடிவடையாத பாதாளச் சாக்கடைத் திட்டம் (UGD) மக்களின் முதன்மைப் புகாராக உள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டு காரணமாக மக்கள் காசு கொடுத்துத் தண்ணீர் வாங்கும் அவலநிலை நீடிக்கிறது. மேலும், கோயில் மற்றும் அரசு நில ஆக்கிரமிப்புகள், ரியல் எஸ்டேட் மாபியாக்களின் ஆதிக்கம் போன்றவை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. ஒரு மாநகராட்சியாக இருந்தும் ஆவடியில் ஓர் அரசு கலைக் கல்லூரி கூட இல்லை என்பது இளைஞர்களின் நீண்டகால ஏக்கமாகும். இத்தகைய அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாதது ஆளுங்கட்சிக்குச் சவாலாக அமையலாம். இருப்பினும், தற்போதைய அமைச்சர் எஸ்.எம். நாசருக்குத் தொகுதியில் இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் 'லோக்கல் லீடர்' என்ற பிம்பம் அவருக்கு ஒரு பலமான அடித்தளத்தைத் தருகிறது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் எஸ்.எம். நாசர் சுமார் 55,275 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் திமுக சுமார் 140 பூத்துகளில் மிகவும் வலிமையாக (Strong) இருந்தது. அதிமுக வேட்பாளர் மாஃபா பாண்டியராஜன் 85 பூத்துகளில் தனது செல்வாக்கைக் காட்டினார். நாம் தமிழர் கட்சி 10% வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் 9% வாக்குகளையும் பெற்று நகர்ப்புற வாக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தின. குறிப்பாக, அந்தத் தேர்தலில் சுமார் 60 பூத்துகள் 'ஸ்விங்' (Swing) பூத்துகளாக இருந்தன.

கான்சிலிடிக்ஸ் குழுவின் 2026 தேர்தல் கணிப்பின்படி, அமைச்சர் நாசருக்குத் தனிப்பட்ட செல்வாக்கு இந்தத் தொகுதியில் அதிகமாக உள்ளது. நகராட்சித் தலைவராகவும் அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் அவருக்குச் சாதகமாக உள்ளது. இருப்பினும், விஜய்யின் தமிழக வெற்றி கழகம் சுமார் 18% வாக்குகளைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நேரடியாக திமுகவின் வாக்குகளில் சுமார் 10% வரை சேதாரத்தை ஏற்படுத்தும். அதேசமயம், அதிமுக இந்தக் கூட்டனியில் பிஜேபிக்குத் தொகுதியை ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதால், 'உதயசூரியன் Vs தாமரை' என்ற நேரடிப் போட்டி நிலவ வாய்ப்புள்ளது. சிறுபான்மையினர் வாக்குகள் மற்றும் ராணுவத் தொழிலாளர்களின் வாக்குகள் யாரை நோக்கித் திரும்புகின்றன என்பதைப் பொறுத்தே ஆவடி கோட்டை யாருக்கு என்பது முடிவாகும். 112 ஸ்விங் பூத்துகளில் விஜய்யின் தாக்கம் அமைச்சரின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்குமா என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com