

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைத்துள்ள ஆனைமலைப் புலிகள் காப்பகத்தின் உடுaமலை மற்றும் அமராவதி வனப்பகுதிகள் வெறும் மரங்களும், மலைகளும் நிறைந்த பகுதி மட்டுமல்ல. யானைகள் மற்றும் புலிகளின் தாயகமாக விளங்குகிறது. இந்நிலையில் யானைகள் கூட்டமாக வலம் வந்த தடங்களில் தற்போது வேட்டைக்காரர்களின் ரத்த வெறி தாண்டவமாடத் துவங்கியுள்ளது. கூட்டம் கூட்டமாய் இந்த காடுகளில் திரிந்து வந்த யானைகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் கொல்லப்படுவதும், அதன் தந்தங்களும் பற்களும் திருடப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.
கடந்த மாதம் 18-ஆம் தேதி அமராவதி வனச்சரகத்தில் அடர்ந்த காட்டின் நடுவில் 40 வயது மதிக்கத்தக்கப் பெண் யானை ஒன்று உயிரிழந்து அழுகிய நிலையில் கிடந்தது. அதன் அருகில், வெறும் ஆறு மாதமே ஆன குட்டி யானை ஒன்றும் மர்மமான முறையில் பரிதாபமாக இறந்து கிடந்தது.
இந்த காட்சி அந்தப் பிஞ்சின் மரணம் ஒட்டுமொத்தக் காட்டின் பாதுகாப்பு இல்லா நிலையை எதிரொலித்தாக இருந்தது. இது மட்டுமல்ல சம்பவத்தில் முக்கியமாக யானையின் உடல், மனிதர்களின் ஆசைக்கு இரையாகியிருந்தது. இறந்து கிடந்த தாய் யானையின் கோரைப்பல் உடைத்துத் திருடப்பட்டு, காணாமல் போயிருந்து வனத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. யானையின் மரணங்கள் ஏற்படுத்திய சோகம் மறைவதற்குள், அதைவிடப் பல மடங்கு அதிர்ச்சியை தரும் உண்மைகள் வெளிவர துவங்கியுள்ளன.
வனத்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையை அடுத்து கடந்த 9-ஆம் தேதி அமராவதி நகரில் இரண்டு யானைத் தந்தங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வனக்காவலர் மாரியப்பன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். காட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்க வேண்டிய காவலாளிகளே குற்றச் செயலில் கைகோர்த்திருப்பது வன ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அமராவதி நகர் பாறை செட்டில்மெண்ட்டைச் சேர்ந்த சூர்யா மற்றும் தளிஞ்சி செட்டில்மெண்ட்டைச் சேர்ந்த கருப்புசாமி ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பெண் யானையிடமிருந்து கோரைப்பல்லை எடுத்துப் பாறை இடுக்கில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் வனப்பகுதியில் சிதறிக் கிடந்த யானையின் எலும்புகளுக்கு அருகிலிருந்த மற்றொரு கோரைப்பல் இருப்பதையும் வனத்துறையின் மீட்டனர். இதனையடுத்து யானைத் தந்தம், மான் கொம்பு, சந்தனக்கட்டை போன்றவற்றை விற்றுப் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்ட சூர்யா மற்றும் கருப்புசாமி ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
தாய் மற்றும் குட்டி யானை அடுத்தடுத்து மர்மமான முறையில் பலியான துயரம், அதனைத் தொடர்ந்து தாய் யானையின் கோரைப்பல் மாயம், இவைகளை தொடர்ந்து வனக் காவலர் உட்பட இதுவரை 5 பேர் கைது போன்ற தொடர் சம்பவங்கள் அமராவதி வனப்பகுதியின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளன. இது ஏதோ ஒரு தனிப்பட்ட குற்றம் அல்ல என்றும் இதன் பின்னணியில் பலத்த வேட்டை கும்பல் சதிவலை பின்னப்பட்டிருக்கலாம் என வன ஆர்வலர்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.