தொகுதி மறுவரையறை தீர்மானத்திற்கு அதிமுக எதிர்ப்பு.. “பெண்கள் 33% இடஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறோம்” - இபிஎஸ் கருத்து!

மக்கள்தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையக்கூடாது...
eps vs cm vijay
eps vs cm vijay
Published on
Updated on
2 min read

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று 4-வது நாளாக நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியதும், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் முதல்வர் விஜய் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது பேசிய முதல்வர் விஜய், எதிர்காலத்தில் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் வெகுவாக பாதிக்கப்படும் என தெரிவித்தார். மேலும், தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

இதையடுத்து, தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். பாஜக சார்பில் பேசிய எம்.எல்.ஏ. போஜராஜன், மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், தமிழக அரசு அவசரமாக தனித் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளதாக எதிர்ப்பு தெரிவித்தார். அடுத்து பாமக சார்பில் பேசிய கணேஷ்குமார், தமிழக அரசு கொண்டு வந்துள்ள தீர்மானம் பெண்கள் அரசியல் அதிகாரம் பெறுவதற்கு எதிரானதாக இருப்பதாகக் கூறி, அதனை தங்கள் கட்சி ஆதரிக்காது என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொகுதி மறுவரையறை தொடர்பான அதிமுகவின் நிலைப்பாடு தெளிவானது என தெரிவித்தார். தமிழ்நாடு போன்ற மக்கள்தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையக்கூடாது எனக் கூறிய அவர், தற்போது தமிழ்நாட்டிற்கு 39 மக்களவை உறுப்பினர்கள் இருப்பதாக குறிப்பிட்டார். 1971-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் 7.18 சதவீதமாக உள்ளதாகவும், தொகுதி மறுவரையறைக்குப் பிறகும் இந்த விகிதாச்சாரம் குறையாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்றும் இபிஎஸ் தெரிவித்தார்.

இந்த விகிதாச்சாரம் பாதுகாக்கப்பட்டால் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக சுமார் 20 நாடாளுமன்றத் தொகுதிகள் கிடைத்து, மொத்த எண்ணிக்கை 59 ஆக உயர வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார். தற்போதுள்ள பிரதிநிதித்துவத்தை குறைக்காமல், அதனை உயர்த்த வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு எனவும் தெரிவித்தார். “எங்களுடைய நிலையில் உறுதியாக இருந்தால்தான் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க முடியும்” எனக் கூறிய இபிஎஸ், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

தொகுதி மறுவரையறைக்குப் பிறகும் மாநிலங்களின் தற்போதைய விகிதாச்சாரம் பாதுகாக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டிய இபிஎஸ், அதனை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய அரசு தெளிவான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு குறித்தும் பேசிய இபிஎஸ், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார். 1998-ம் ஆண்டிலேயே நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க அதிமுக முயற்சி செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மத்திய அரசு சார்பில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா இன்னும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத நிலையில், அதன் சாதக, பாதக அம்சங்கள் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை என இபிஎஸ் கூறினார். இத்தகைய சூழலில், தமிழக வெற்றிக் கழக அரசு அரசியல் காரணங்களுக்காக இந்தத் தீர்மானத்தை அவசர அவசரமாக சட்டப்பேரவையில் கொண்டு வந்துள்ளதாக அதிமுக கருதுவதாக தெரிவித்தார். இதனால், தமிழக அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை எதிர்ப்பு தனித் தீர்மானத்தை அதிமுக எதிர்ப்பதாகவும், அதேவேளையில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் அதிமுக ஆதரிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com