மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாகவும், காவிரியில் தமிழகத்துக்குரிய நீரைப் பெற உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், குறுவை சாகுபடி பாதிப்பு, விவசாயக் கடன் தள்ளுபடி, காவிரி நீர், மேகதாது அணை உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் பிரச்சினைகளை முன்வைத்து தமிழக அரசுக்கு எதிராக அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “பொன் விளைகின்ற பூமியான தஞ்சை மாவட்டம் தற்போது வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்குரிய காவிரி நீரை கர்நாடக அரசிடம் இருந்து பெற இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து ரீல்ஸ் வெளியிடுவதில்தான் கவனம் செலுத்துகிறது; விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குறித்து கவலைப்படவில்லை” என தமிழக அரசை விமர்சித்தார். காவிரி நீர் கிடைக்காததாலும், ஆழ்துளைக் கிணறுகளை நம்பி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் முறையாக வழங்கப்படாததாலும் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனால் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் காய்ந்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். போதிய மழை இல்லாததால் ஏரி, குளங்கள் வறண்டு கிடப்பதாகவும், வேளாண் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை தவெக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், அதிமுக ஆட்சியில் ரூ.12,110 கோடி அளவிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விவசாயிகளுக்கு பாகுபாடின்றி கடன் தள்ளுபடி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் எதிர்காலத்தில் விவசாயிகள் உரிய பதிலடி கொடுப்பார்கள் என்றும் எச்சரித்தார். மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்து வரும் நிலையில், தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க தமிழக அரசு உரிய சட்டரீதியான மற்றும் அரசியல் அழுத்தங்களை வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
சம்பா சாகுபடிக்குத் தேவையான தண்ணீரை மாதந்தோறும் பெற கர்நாடக அரசிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், மேட்டூர் அணையில் தற்போது உள்ள நீர்மட்டத்தை மட்டும் வைத்து சம்பா சாகுபடியை மேற்கொள்ள முடியாது என்றும். மேலும், தற்போது சுமார் 10 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றை விரைவாக அரவைக்கு அனுப்பி விவசாயிகளிடம் இருந்து நெல்லைக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். வண்டல் மண் அள்ளுவதற்கு விவசாயிகளுக்கு முழுமையான அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
காவிரி நீர் மாசுபடுவதைத் தடுக்க அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். தமிழக விவசாயிகளின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு அதிமுக முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய்யின் அறை நவீனமயமாக்கப்படுவது குறித்தும் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார். அவர் பேசுகையில், “இப்ப இருக்கிற ரூம் பத்தாதா? நடிகர் என்பதால் அறை நவீனமாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்து முதலமைச்சர் அறையை மாற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன. விவசாயிகள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவருக்கு நவீன அறை வேண்டுமாம். ஏன், இப்போது இருக்கிற அறை போதாதா?” என கேள்வி எழுப்பினார்.
மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்தாமல், முதலமைச்சர் அறையை நவீனமயமாக்குவதற்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். “முதலில் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்; அதன்பிறகு இதுபோன்ற விஷயங்களைப் பார்த்துக்கொள்ளலாம்” என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார். காவிரி நீர், மேகதாது அணை, குறுவை சாகுபடி, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்