

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஆட்சியைக் கடுமையாக விமர்சித்தார்.
மின்வெட்டு குறித்து பேசிய அவர், "பத்திரிகையாளர்கள் மின்வெட்டு குறித்து கேள்வி எழுப்பும்போது அமைச்சர், தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்கிறார். இன்னும் அதை மறைத்துக் கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை. ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்து தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும்.
மின்வெட்டு இல்லை என்று சொல்லிக்கொண்டே, மின்சாரத் துறை அமைச்சர், தமிழகத்தில் மின்சாரப் பற்றாக்குறை இருப்பதாக கூறி, வெளிச் சந்தையில் 2000 மெகாவாட் மின்சாரத்தை வாங்கப்படும் என்று கூறுகிறார். மின்வெட்டு இல்லை என்றால் எதற்கு வெளிச் சந்தையில் மின்சாரம் வாங்க வேண்டும்?
தமிழகத்தில் இரவிலும் பகலிலும் கடுமையான மின்வெட்டு இருக்கிறது. இரவில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இந்த அரசு விழித்துக் கொண்டு மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும்." எனப் பேசினார்.
பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது, "மின்சாரம் எவ்வளவு தேவை என்பதை அறிந்து முன்பே கொள்முதல் செய்யாததால்தான் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அனுபவமில்லாத அரசாங்கம் என்பதால் தான் மின் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இன்று மின்வெட்டு காரணமாக மக்கள் எல்லாம் போராட்டத்தில், போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்." என்றார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஊழல் அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் கொடுத்ததை வாங்கிக்கொண்டிருந்தார்கள். இப்போது லஞ்சம் டிமாண்ட் செய்யப்படுகிறது. லஞ்சம் இல்லாமல் எந்த அலுவலகத்திலும் எந்த வேலையும் நடப்பதில்லை. லஞ்ச ஒழிப்புத்துறை பல்வேறு அலுவலகங்களில் சோதனை செய்து பல்லாயிரம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன. சோதனை நடத்தும் அலுவலகங்களில் இவ்வளவு ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது என்றால் சோதனை நடக்காத அலுவலகங்களில் லஞ்ச லாவண்யம் எப்படி மலிந்து கிடக்கும் என்பதை மக்கள் உணர வேண்டும்." என்றார்.
அத்துடன், "தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு புதிய திட்டங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் எதிர்பார்த்த அளவு புதிய பெரிய திட்டங்கள் எதுவும் வரவில்லை.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு, எங்களுக்கு கிடைத்துள்ள தகவலின்படி, 40,000 கோடி கடன் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. அதில் 36,000 கோடி வருவாய் செலவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இப்போது புதிய தமிழக, புதிய தலைமைச் செயலகம் கட்டுவது அவசியமா? நிதிநிலையை சரி செய்த பிறகு, புதிய தலைமைச் செயலகம் கட்டலாம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு இடத்தை தேர்வு செய்யும்போது யாருக்கும் பாதிப்பில்லாமல், போக்குவரத்து நெரிசல் இல்லாமல், அனைவரும் வந்து செல்லக்கூடிய ஒரு நல்ல இடத்தை தேர்வு செய்து தலைமைச் செயலகம் கட்டுவதில் தவறில்லை. ஆனால் கடல் ஓரமாக மீனவர்கள் அதிகமாக வசிக்கின்ற பகுதியில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த, பள்ளிகள் இருக்கும் பகுதியில் தலைமைச் செயலகம் கட்டுவது எந்த விதத்திலும் சரியில்லை. அதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட வேண்டும்." எனப் பேசியுள்ளார்.
மேலும் ஆளும் கட்சியை சாடிய எடப்பாடி பழனிசாமி, "தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி சம்பவங்கள், பாலியல் குற்றங்கள் நடக்காத நாளே இல்லை என்ற அளவுக்கு மோசமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
ஆட்சிப் பொறுப்பேற்று 4 மாதங்களில் உணவுப் பொருட்களின் விலை 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அரிசி 1 கிலோ 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரைக்கும் உயர்ந்துள்ளது. பருப்பு விலை உயர்ந்துள்ளது, எண்ணெய் விலை, காய்கறி விலை எல்லாமே உயர்ந்துள்ளது. இவையெல்லாம் சரிசெய்ய இந்த அரசு முன்வரவில்லை.
சட்டமன்றத்தில் சர்க்காரியா கமிஷன் பற்றி பேசுகின்றனர். அதில் கூறப்படும் ஊழல் நடந்தபோது முதலமைச்சரும் பிறக்கவில்லை, எதிர்க்கட்சித் தலைவரும் பிறக்கவில்லை.
இப்போது அந்தப் பிரச்சனையைப் பேசி என்ன பிரச்சனை? அதனால் நாட்டு மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது? சட்டமன்றத்தில் காலத்தைக் கடத்துவதுதான் இந்த ஆட்சியின் நிலைப்பாடாக இருக்கிறது. ஆக்கப்பூர்வமாக தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய எந்த நன்மையும் கிடைக்கவில்லை." என்றார்.
இன்பச் சுற்றுலாவாகத்தான் பார்க்கப்படுகிறது!
முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் பற்றி பேசிய எடப்பாடி பழனிசாமி, " லண்டன் போயிட்டு வந்ததே வெற்றி என்றுதான் அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மக்களிடம் கேட்டுப் பாருங்கள், இது ஒரு இன்பச் சுற்றுலாவுக்காகத் தான் பார்க்கப்படுகிறது.
மதர்சன் நிறுவனம் இந்தியாவில் 32 இடங்களில் இருக்கிறது. சென்னையிலும் அதற்கு அலுவலகம் இருப்பதாகச் செய்திகள் வந்திருக்கிறது. இங்கேயே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளலாமே? லண்டனுக்குச் சென்றுதான் புரிந்துணர்வு செய்ய வேண்டுமா?" எனக் கேள்வி எழுப்பினார்.
இறுதியாக இடைத்தேர்தல் குறித்து பேசுகையில், "மதுராந்தகமும், தாராபுரமும் திணிக்கப்பட்ட இடைத்தேர்தல் தேர்தல் என்றுதான் தவெக ஆட்சி அமைப்பதற்கு உறுதுணையாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
மக்கள் தீர்ப்பளித்தபடி பதவிக்கு வந்த அதிமுக MLA-க்களை விலைக்கு வாங்கி குதிரை பேரம் மூலம் தற்போது மீண்டும் தேர்தல் நடக்கவிருக்கிறது. மக்களின் தீர்ப்பை மதிக்காத தவெக-வுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்." எனப் பேசினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்