
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக பேருந்துகள் இயக்கப்படாததால் ஆத்திரமடைந்த பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக பேருந்துகள் இயக்கப்படாததால் ஆத்திரமடைந்த பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென் மாவட்டங்களுக்கு குறித்த நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படாததால் ஆவேசம் அடைந்த பயணிகள், பிற மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகளை சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பயணிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து சிறைப்பிடித்த பேருந்துகளை பொதுமக்கள் விடுவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் சரியாக இயக்கப்படவில்லை என்று கூறி ஆத்திரமடைந்த பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகளை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டு வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
மேலும் பேருந்துகள் நீண்ட நேரமாக இயக்கப்படாத நிலையில் முதியவர்கள், குழந்தைகள், ஊனமுற்றோர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். பேருந்துகள் வருகை குறைவாக இருப்பதால் கிடைக்கின்ற பேருந்துகளில் பயணிகள் நின்றுக் கொண்டு பயணிக்கும் நிலை ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் பேருந்துகளில் ஏற பயணிகளிடையே தள்ளுமுள்ளு சம்பவங்களும் ஏற்பட்டது. பேருந்து நிலையத்திற்குள் வரும் பேருந்துகளில் இருக்கையை பிடிக்க பயணிகள் முண்டியடித்துக் கொண்டனர்.
மேலும் பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக காத்திருந்த பயணிகள் சிலர் முன்பதிவு செய்யப் பட்ட பயணிகள் மட்டும் தான் ஊர்க்கு செல்ல முடியும் என்றும், முன்பதிவு செய்யாமல் சொந்த ஊர்களுக்கு பயணிக்க முடியாத சூழல் இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் போக்குவரத்து துறையை சார்ந்த அதிகாரிகள் இதுவரை யாரும் இந்த பகுதிக்கு வரவில்லை எனவும் காவல்துறையினர் மட்டுமே சமரசம் பேசி வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், கோடை விடுமுறை காலங்களில் நள்ளிரவு நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்குமாறு பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசத்திற்கு பின்னர் தற்பொழுது மறியலில் ஈடுபட்ட பயணிகள் கலைந்து சென்றனர். நீண்ட நேரமாக சிறை வைக்கப்பட்டிருந்த பேருந்தும் விரிக்கப்பட்டு வழக்கம் போல் இயங்கத் துவங்கியது.
இதையும் படிக்க | முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம்...எங்கெங்கு என்னென்ன ஒப்பந்தங்கள் ?