கோவை விளாங்குறிச்சி பகுதியில், எரிவாயு குழாய்கள் பொருத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, திடீரென எரிவாயு குழாய் பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
இந்தியன் ஆயில் கார்பரேஷன் சார்பாக, எரிவாய் குழாய்கள் பொருத்தப்படும் பணிகள் நகராட்சிகளிலும், ஒரு சில மாநகர பகுதிகளிலும், இந்த குழாய் பதிக்கும் பணியானது நடந்து வருகிறது. இந்நிலையில், கோவை மாநகராட்சியின் 24வது வார்டான, காளப்பட்டி அடுத்த தண்ணீர் பந்தல் பகுதியில் ஒரு மாபெரும் அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியது.
எரிவாயு பணிகள் நடைப்பெற்று வரும் நிலையில், அந்த எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டப் பிறகு, அதற்கான சோதனைகள் நடந்துள்ளன. ஏற்கனவே சோதனைக்காக வெறும் காற்று மட்டுமே நிரப்பப்பட்டிருந்தது. தற்போது எரிவாயுவை நிரப்பி சோதனை செய்து கொண்டிருந்தனர். திடீரென யாரும் எதிர்பாராத விதமாக, பூமிக்கு அடியில் பதிக்கப்பட்ட அந்த எரிவாயு குழாய்கள் வெடித்து சிதறியுள்ளது.
தூசு, நிரம்ப, பெரும் சத்தத்துடன் அந்த குழாய் வெடித்ததால், பரபரப்பு நிலவியுள்ளது. ஏற்கனவே, அவிநாசி சாலை மேற்கு பகுதியில் இருந்து விளாங்குறிச்சி செல்லக்கூடிய அந்த சாலை, வழக்கமாக அதிகமான போக்குவரத்து காணக்குட்டிய இடமாக இருக்கிறது. ஆனால், இச்சம்பவம் நடந்தது மதிய வேளை என்பதால், அதிர்ஷ்டவசமாக குறைந்த போக்குவரத்தும், வாகனப் பயன்பாடுகள் குறைவாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
உடனடியாக அருகில் இருந்த காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, அடுத்தடுத்து நடக்க வேண்டிய மற்ற சோதனைகளும் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, இந்த எரிவாயு குழாய்கள் எப்படி வெடித்தது என, இந்திய ஆயில் நிறுவனம், அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, விளை நிலங்களுக்கு அருகே எரிவாயுகுழாய்கள் பதிக்கப்பட கூடாது என விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சாலைகளில் வெடித்து சிதறிய இந்த எரிவாயு குழாய்களின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் படு வைரலாக்கப்பட்டு வருகிறது.
முதலில் அந்த குழாய்களில் காற்று நிரப்பப்பட்டு, குழாய்கள் தாங்குகிறதா என்பதை சோதித்த பிறகு தான், எரிவாயு அக்குழாய்களில் நிரப்பப்பட்டதாக அதிகாரிகள் கூறும் நிலையில், திடீரென் நடந்த இச்சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.