"பெண்கள் மீது பொய்வழக்கு போடுவதா?"  அன்புமணி இராமதாஸ் கேள்வி...!! 

"பெண்கள் மீது பொய்வழக்கு போடுவதா?"  அன்புமணி இராமதாஸ் கேள்வி...!! 
Published on
Updated on
2 min read

என்.எல்.சி நிறுவனத்தின் நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிராக  போராட்டம் நடத்திய பெண்கள் மீது காவல்துறையினர் வழக்குகளை பதிவு செய்வதா என அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடலூர் மாவட்டம் கரிவெட்டி கிராமத்தில், என்.எல்.சி நிறுவனத்தின் நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிராக  போராட்டம் நடத்திய பெண்கள் மீது காவல்துறையினர் வழக்குகளை பதிவு செய்ததாக தெரிகிறது. மேலும் அவ்வழக்குகளின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அவர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருக்கிறது. காவல்துறையினரின் இந்த செயலை பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டித்து அவரது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.10 லட்சம் வரை வருவாய் தரக்கூடிய நிலங்களை அடிமாட்டு விலைக்கு பறிக்க என்.எல்.சி துடிக்கிறது; இதற்காக அரசு எந்திரத்தை ஏவுகிறது.  என்.எல்.சி மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் அதிகார அத்துமீறலில் இருந்து தங்களின் வாழ்வாதாரமான நிலங்களைக் காக்க மக்கள் போராடுகின்றனர். அது அவர்களின் உரிமைப் போராட்டம். அதை அரசு மதிக்க வேண்டும். அதற்கு மாறாக உரிமைக்காக போராடும் மக்கள் மீது பொய்வழக்குகளை பதிவு செய்து பழிவாங்கக் கூடாது" என தெரிவித்துள்ளார்.

மேலும், "நில உரிமைக்காக போராடும் பெண்கள் மீது பொய்வழக்குகளை பதிவு செய்து நீதிமன்றங்களுக்கு அலைய வைத்தால் பெண்கள் அஞ்சி விடுவார்கள்; அதன் பின்னர் போராட முன்வரமாட்டார்கள் என்று என்.எல்.சி நிறுவனமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் நினைக்கிறது. அவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது. எந்த உரிமையை பறித்தாலும் மக்கள் பொறுத்துக் கொள்வார்கள். வாழ்வுரிமையை பறிப்பதை கடலூர் மாவட்ட மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். பந்தை அடிக்க அடிக்க எவ்வளவு வேகத்தில் எழும்புமோ, அந்த அளவுக்கு அடக்குமுறையை அரசும், என்.எல்.சியும் கட்டவிழ்த்து விட விட மக்களின் உரிமைப் போராட்டம் தீவிரமடையுமே தவிர, ஒருபோதும் ஓயாது" எனக் கூறியுள்ளார். 

தொடர்ந்து, "ஜனநாயகம், சமூக நீதி பேசும் அரசு, அவற்றை செயலிலும் காட்ட வேண்டும். தங்களின் நிலங்களைக் காக்க தங்களுக்கு உரிமை உண்டு என்ற மக்களின் நிலைப்பாட்டை மதிக்க வேண்டும். அவர்களின் நிலங்கள் கையகப்படுத்தப்படாது; என்.எல்.சி வெளியேற்றப்படும் என்று அறிவிப்பதுடன், அவர்கள் மீது தொடுக்கப்பட்ட பொய்வழக்குகளை அரசு திரும்பப்பெற வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com