டைல்ஸ் கடையில் தீ விபத்து...! 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்...!

திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் அருகே டைல்ஸ் கடையில் தீ பிடித்ததில் சொகுசு கார், சரக்கு வாகனம் உள்ளிட்ட 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. தொழில் போட்டி காரணமாக தீ வைக்கப்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டைல்ஸ் கடையில் தீ விபத்து...! 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்...!
Published on
Updated on
1 min read

விபத்து : 

திண்டுக்கல் பேகம்பூர் சிக்கந்தர் சாகிபா சந்து பகுதியைச் சேர்ந்தவர் முஸ்தபா (47). இவர் திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில், ஏபி நகர் பகுதியில் டைல்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.  இந்நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் கடையில் தீ பற்றி எரிவதாக அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்துள்ளனர். இதை அடுத்து முஸ்தபா கடைக்கு விரைந்து வந்து பார்த்தபோது கடையில் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் சரக்கு வாகனம் எரிந்து கொண்டிருந்ததுள்ளது. பின்னர், முஸ்தபா திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். இதை அடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் மயில் ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

தீயில் சேதம் :
 
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தும், சொகுசு கார் முழுவதும் எரிந்து சாம்பலானது. சரக்கு வாகனம் ஒன்று பாதி எரிந்து விட்ட நிலையில், மேலும் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து சேதம் அடைந்து விட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீ விபத்து நடந்த இடத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் முஸ்தபா,  திண்டுக்கல் தாலுகா காவலில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தொழில் போட்டி காரணமாக மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளதாக கூறியுள்ளார் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com