
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரை கடலில் இன்று காலை திடீரென நீரில் சுழல் ஏற்பட்டு, சூறாவளி காற்றாக உருவெடுத்தது. கடற்பகுதியில் 50 அடி உயரத்திற்கு நீர் சுழல் போன்று எழுந்த சூறாவளி காற்று, சிறிது சிறிதாக நகர்ந்து தரையை நோக்கி வந்தது.
அப்பொழுது கடற்கரையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 50 கிலோ எடை கொண்ட மீன்பிடி வலைகட்டையை சூறைக்காற்று தூக்கி வீசியது. மேலும் கடற்கரையில் இருந்த கீற்று கொட்டகை உள்ளிட்டவையும் சூறாவளி காற்றில் பறந்தன.
இதை பார்த்து அச்சமடைந்த மீனவர்கள், அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சுமார் 5 நிமிடம் வீசிய இந்த காற்றால் கடற்கரை பகுதி மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது. வைரலாகி வரும் இந்த வீடியோ காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.