தவெக ஆட்சியில் முதல் முறையாக .. சபாநாயகர் முன் தரையில் அமர்ந்த திமுக எம்.எல்.ஏக்கள்! தரணாவினால் சட்டப்பேரவையில் பரபரப்பு!

உதயநிதிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை அடுத்து மீண்டும் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட தொடங்கினர்
dmk
Published on
Updated on
1 min read

3 நாள் விடுமுறைக்கு பிறகு சட்டமன்ற பேரவை இன்று தொடங்கியது. பேரவை தொடங்கிய சில நிமிடங்களிலையே எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட தொடங்கினர். தங்களது கவன ஈர்ப்பு தீர்மானங்கள் குறித்து உடனடியாக பேச அனுமதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனால் சட்டப்பேரவை தொடங்கிய உடனேயே அமளி நிலவியது. முதல்வர் விஜய்யின் பதிலுரைக்கு பின்னே எதிர்க்கட்சியினரை அனுமதிக்க முடியும் என்று சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

பின்னர் முதல்வர் விஜய் பதிலுரையை தொடங்கி பார்ட்டி பண்ட் மற்றும் கடந்த ஆட்சியில் நடந்த சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து பேசினார். இதற்கு பதிலளிக்க முயன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை அடுத்து மீண்டும் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட தொடங்கினர்.

முதலமைச்சர் விஜய் பேசியதற்கு எதிர்க்கட்சி தலைவர் பதில் அளிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் எனக் கூறி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்ட திமுக தலைவர்கள் சபாநாயகரை நோக்கி கேள்விகளை எழுப்பினர்.

சபாநாயகர் இருக்கை முன்பு கூடியிருந்த திமுகவினர் சிலர், முதல்வர் விஜய் இடமே பேச அனுமதி அளிக்க வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். அதன் அடிப்படையில் முதல்வர் விஜயும் சபாநாயகரிடம் ‘வாய்ப்பு கொடுங்க’ என்று வலியுறுத்திக் கூறினார். முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்தும் "திமுகவினர் மீது முதல்வர் விஜய் முன் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க அனுமதி அளிக்க முடியாது" என திட்டவட்டமாக சபாநாயகர் தெரிவித்திருந்தார். மேலும் "முதலமைச்சர் பேசும் போது அமைதியாக இருந்திருந்தால் பதில் அளிக்க அனுமதித்திருப்பேன்" என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

முதலில் முதல்வர் விஜயின் பதிலுரைக்கு பின் எதிர்க்கட்சி தலைவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்திருந்த நிலையில் உரை முடியும் வரை காத்திருந்தனர். ஆனால் பதிலுக்கு பின் எதிர்க்கட்சியினருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சியின் கோரிக்கை ஏற்று வாய்ப்பு கொடுக்க  மறுத்த சபாநாயகரின் நடவடிக்கையால் எதிர்க்கட்சியினர் சட்டமன்ற பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com