பழனி - கொடைக்கானல் செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை வனத்துறையினர் பறிமுதல்

பழனி - கொடைக்கானல் செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை வனத்துறையினர் பறிமுதல்
Published on
Updated on
2 min read

பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். 


திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து 64கிலோமீட்டர் தெலைவில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது கொடைக்கானல். சர்வதேச அளவில் புகழ்பெற்ற கோடை வாசஸ்தலமான கொடைக்கானலுக்கு செல்ல பிரதானவழியாக பழனியில் இருந்து செல்லும் சாலை அமைந்துள்ளது. பழனி கோவிலுக்கு சென்றுவிட்டு கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கொண்டுவரும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் மற்றும் கூல்டிங்க்ஸ் பாட்டில்களை மலைப் பகுதிகள் மற்றும் வனப்பகுதியில் வீசி செல்வது வாடிக்கையாக உள்ளது. சுற்றுலா பயணிகள் வீசிச் செல்லும் பிளாஸ்டிக் பாட்டில்களால் வனப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. மேலும் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

இதையடுத்து கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு செல்வதும், அவற்றை மலைப்பகுதிகளில் வீசுவதும் வனத்துறையால் தடைசெய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது கோடைகாலம் துவங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், கோடை வெயிலில் இருந்து தப்பிக்க தமிழகம் மற்றும் பிறமாநிலங்களில் இருந்து கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுக்க துவங்கியுள்ளனர். இதனால் பழனி-கொடைக்கானல் சாலையில் சுற்றுலா வாகனங்கள் அதிகளவில் செல்லத் துவங்கியுள்ளது.  இதையடுத்து கொடைக்கானல் மலைப்பாதை துவங்கும் தேக்கந்தோட்டம் பகுதியில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் சுற்றுலா வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

மேலும் தவிர்க்கமுடியாத நிலையில் வாட்டர் பாட்டில்களை கொண்டு செல்லவேண்டிய சூழல் இருந்தால்,  சுற்றுச்சூழலை கெடுக்கும் பிளாள்டிக் பாட்டில்களை மலைப்பாதையில் வீசி எறியக்கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தி அனுப்புகின்றனர். கொடைக்கானலுக்கு செல்லும் வாகனங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. வனத்துறையினரின் செயல்பாட்டை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் வரவேற்கின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com