முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு...

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு...
Published on
Updated on
1 min read

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் உள்பட 14 பேர் பறந்து சென்ற ராணுவ ஹெலிகாப்டர், நீலகிரி மாவட்டம் காட்டேரியில் எதிர்பாராத விதமாக மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்ததாக, இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிபின் ராவத் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், மருத்துவமனை செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாகவும், மீட்பு குழுவினர் கூறியுள்ளனர்.

இந்நிலையில்,  மறைந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடலுக்கு, நாளை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குன்னூரில் ராணுவ நடைமுறைகள் முடிந்த பின்னர், பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல் இன்று டெல்லிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. அதன் பின்னர் டெல்லியில் உள்ள பிபின் ராவத்தின் இல்லத்தில் நாளை காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படும் என்றும், பின்னர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு டெல்லி கன்டோன்மென்டில் அடக்கம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து, டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழப்பு தொடர்பாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று விளக்கம் அளிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com