
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சரக்குகளை ஏற்றி சென்ற தோணி கடலில் ஏற்பட்ட சீற்றத்தின் காரணமாக நடுக்கடலில் மூழ்கியது.
படகு மூழ்கியதில் ஒருவர் பலி
படகில் சென்ற மாலுமிகளில் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். ஆறு பேர் வேறு கப்பல் மூலம் மீட்கப்பட்டனர். தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தின் சோன் பி எனப்படும் பழைய துறைமுகத்திலிருந்து தோணி எனக் கூடிய சிறிய வகை கப்பல்களில் இலங்கை, மாலத்தில் உள்ள நாடுகளுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்படும்.
சரக்குப் படகு
கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி மதியம் ரைமண்ட் என்பவருக்கு சொந்தமான எஸ்தர் ராஜாத்தி என்ற படகில் இரும்பு பொருட்கள், காய்கறிகள் மற்றும் கட்டுமான பொருட்கள் ஏற்றிக்கொண்டு மாலத்தீவு புறப்பட்ட சென்றது.
கேப்டன் சகாய கில்பெர்ட் ஜான் பெர்க்மான்ஸ் தலைமையில் ஸ்டான்லி சாக்ரியாஸ், லூசு தொன்மை ஜேசு, ஆண்டன் ராஜேந்திரன், மில்டன் தாசன், ஆண்டன் வாஸ்டின் ,லிங்கராஜ் முனியசாமி ஆகிய ஏழு பேர் மாலுமிகளாக தோணியில் சென்றுள்ளனர்.
கடல் சீற்றம்
பயண கணக்கின்படி ஒன்றாம் தேதி இந்த தோணி மாலத்தீவு சென்றடைய வேண்டும் என்கின்ற நிலையில் இன்று அதிகாலை மாலத்தீவிலிருந்து சுமார் 60 கடல் மைல் தொலைவில் படகு சென்று கொண்டிருந்தபோது அதிவேக காற்று வீசியதன் காரணமாக கடலில் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் தோணி கடலில் மூழ்கியது.
நடுக்கடலில் தத்தளித்த மாலுமிகள்
அப்போது படகில் சென்ற மாலுமிகள் அனைவரும் ஆழ்கடலில் தத்தளித்தனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு கப்பலில் இருந்த மாலிமிகள் தோணி மூழ்குவதையும் அதில் உள்ள மாலுமிகள் கடலில் தத்தளிப்பதையும் கண்டதும் அவர்களை கயிறு ஏணி மூலமாக மீட்டுள்ளனர்.
ஆறு மாலுமிகள் மீட்கப்பட்ட நிலையில் ஸ்டான்லி சாக்ரியாஸ் என்ற ஒரு மாலுமி மட்டும் கடலில் மூழ்கி உயிரிழந்தார். உயிரிழந்த மாலுமி ஸ்டான்லி சாக்ரியாஸ் (59) உடலை தூத்துக்குடி கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் தோணி உரிமையாளர்கள் சங்கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.