”யானைப்பசிக்கு சோளப்பொறி போல தான்” வெறும் 631 காலிப் பணியிட உயர்வு...!

”யானைப்பசிக்கு சோளப்பொறி போல தான்” வெறும் 631 காலிப் பணியிட உயர்வு...!
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தொகுதி 4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை  20 ஆயிரமாக உயர்த்த வேண்டும்  என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 காலி பணியிடங்களின் எண்ணிக்கையை 20 ஆயிரமாக உயர்த்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு அரசுப் பணியாளார் தேர்வாணையம் கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடத்திய குரூப் 4 தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை முன்பு அறிவித்திருந்த 10,117 என்பதிலிருந்து 10,748 ஆக உயர்த்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானதை சுட்டிக்காட்டியவர், வெறும் 631 காலி பணியிடங்களின் எண்ணிக்கை மட்டுமே உயர்த்தப்பட்டிருப்பதாகவும், இது தமிழ்நாட்டில் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் “யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றது” தான் என்று விமர்சித்துள்ளார். 

தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் காலியாக உள்ள நான்கரை லட்சம் அரசு காலிப் பணியிடங்களில், குறைந்தது மூன்றில் ஒரு பங்கு நான்காம் தொகுதி பணியிடங்கள் உள்ளன. எனவே, காலியாக உள்ளதைக் கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற போட்டித் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நான்காம் தொகுதி பணியாளர்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 20 ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம், தமிழ்நாட்டில் படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் இருண்ட வாழ்வில் தமிழக அரசு ஒளியேற்றவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com