“ரோடு ஷோக்களுக்கான வழிகாட்டு நெறிமுறை..” தமிழக அரசுக்கு 10 நாட்கள் கெடு…! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

விதிமுறைகள் குறித்த யோசனைகளை உடனடியாக அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள்....
chennai high court
chennai high court
Published on
Updated on
2 min read

அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை சமர்ப்பிக்க, தமிழக அரசுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூரில், செப்டம்பர் 27 ம் தேதி, த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, அரசியல் கட்சி தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், வழிகாட்டு விதிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, கெடு விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், பொதுக் கூட்டங்கள், ரோடு ஷோக்களுக்கான வரைவு வழிகாட்டு விதிமுறைகள் வகுப்பது தொடர்பாக அரசின் பல்வேறு மட்டங்களில் ஆலோசனை  நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து நவம்பர் 6ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டதாகவும், இந்தக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கொண்டுள்ள 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கியுள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 40க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு வரைவு வழிகாட்டு விதிமுறைகள் அனுப்பி வைக்கப்பட்டு, அவர்களின் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த கருத்துக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி இறுதி வரைவு வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க ஒரு மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு விதமாக நிபந்தனைகள் விதிக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பினார். மேலும் கடைசி நேரத்தில் அனுமதி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

அரசியல் கட்சிகளுக்கு பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கு அனுமதி வழங்கும்போது தேவையில்லாத நிபந்தனைகளை விதிக்க கூடாது என்றும் 15 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்கும் பட்சத்தில் 5 முதல் 7 நாட்களில் முடிவெடுத்து தெரிவிக்க வேண்டும் என்றும் அரசுக்கு தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.

அனைத்து கட்சிகளின் கருத்துக்களும் அரசின் வசம் உள்ள நிலையில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளான தவெ.க. மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் வரைவு வழிகாட்டு விதிமுறைகள் குறித்த யோசனைகளை உடனடியாக அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த யோசனைகளை பரிசீலித்து பத்து நாட்களில், நவம்பர் 20-ம் தேதி வரைவு வழிகாட்டு விதிமுறைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 21ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர்.

இதற்கிடையில்  வழிகாட்டு விதிமுறைகள் வகுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நிர்வாகி தாக்கல் செய்த மனுவையும், வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவையும் ஏற்க தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com