
இணையதளங்களில் பகிரப்படும் பெண்களின் அந்தரங்க வீடியோக்களை அகற்றுவது தொடர்பாக நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை வகுத்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இணையதளங்களில் பகிரப்பட்ட தன்னுடைய அந்தரங்க வீடியோக்களை அகற்ற கோரி பெண் வழக்கறிஞர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம், பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோ, மற்றும் புகைப்படங்கள் 6 இணையதளங்களில் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்குகள் மட்டுமல்லாமல் அனைத்து பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை மறைத்து, வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதியளித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட வழக்கு ஆவணங்களில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரகுரு, சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்கள், நேரடியாக தங்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அகற்றுவது தொடர்பாக எளிதாக அணுகும் வகையில் நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்து வருவதாக தெரிவித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மத்திய அரசின் வழிக்காட்டு நெறிமுறைகளை தாக்கல் செய்ய ஏதுவாக வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 5 -ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.