Innova கேட்டவரின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி! எத்தனை MLA-களிடம் கார் இல்லை?

இந்த இலவச கார் வழங்கும் திட்டத்தால் பயன் பெறப்போவது யார் என்பதைத் தெரிந்துகொள்ள, இந்த திட்டத்தை வரவேற்று பேசியவர்களின் பின்னணியைப் பார்க்கலாம்.
TVK Car Announcement
Innova கேட்டவரின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி! எத்தனை MLA-களிடம் கார் இல்லை?
Published on
Updated on
3 min read

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது தொடர்பாக பேரவையில் மிகப்பெரிய விவாதம் நடந்து ஓய்ந்திருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக உறுப்பினர்கள் 59 பேரும் கார் பெற்றுக்கொள்ள மாட்டோம் என அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்தது.

இறுதியாக, பொதுப்பணித்துறை அமைச்சர், "எங்கள் கட்சியிலும் ஏற்கெனவே கார் வைத்திருக்கக்கூடிய உறுப்பினர்கள் காருக்காக விண்ணப்பிக்கப் போவதில்லை. ஆனாலும், அரசு ஒரு திட்டத்தை அறிவிக்கும்போது எல்லோருக்குமாக அறிவிப்பதுதான் நடைமுறை" என்றார்.

முதல்வரின் தீர்மானத்துக்கு ஆதரவளித்த உதயநிதி; நன்றி சொன்ன ஆதவ் அர்ஜுனா - என்ன பேசினர்?
முதல்வரின் தீர்மானத்துக்கு ஆதரவளித்த உதயநிதி; நன்றி சொன்ன ஆதவ் அர்ஜுனா - என்ன பேசினர்?

சட்டமன்றத்தில் எந்தெந்த கட்சிகளில் எத்தனை உறுப்பினர்கள் கார் இல்லாமல் இருக்கின்றனர்? இந்த இலவச கார் வழங்கும் திட்டத்தால் பயன் பெறப்போவது யார் என்பதைத் தெரிந்துகொள்ள, இந்த திட்டத்தை வரவேற்று பேசியவர்களின் பின்னணியைப் பார்க்கலாம்.

கெத்துக்காக அரசாங்க கார்?

இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்றுக்கு முன்தினம் பேசிய மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ், "நிறைய பேரிடம் 4, 5 கார்கள் இருக்கின்றன. என்னிடமும் கார் இருக்கிறது. ஆனால், நம் முதலமைச்சர் கொடுத்த காரில் செல்லும்போது நான் பெருமையாகப் பணிக்குச் செல்வேன்.

அவர் கொடுத்த காரில் தொகுதியைச் சுற்றி வரும்போது அதற்கு இருக்கக்கூடிய கெத்து... எம்எல்ஏ என்ற கெத்து... முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனப் பேசினார்.

அவரது தேர்தல் பிரமாணப் பத்திரத்தின்படி, Toyota Hybrid, Fortuner, Innova கார்களை வைத்திருக்கும் காமராஜ், மக்கள் பணத்தில் வாங்கப்படும் காரில் சென்றால்தான் கெத்தாக இருக்கும் எனக் கூறி புதிய காரை வாங்குவாரா?

முதலமைச்சர் விஜய் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ்
முதலமைச்சர் விஜய் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ்

மொடக்குறிச்சி எம்எல்ஏ சண்முகம், "கொடுக்குறதுதான் கொடுக்குறீங்க. இன்னோவா (Innova) காராகக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று பின்னால் இருக்கும் உறுப்பினர்கள் சொல்லுகின்றனர்" எனப் பேசி, அரங்கத்தைச் சிரிப்பலையில் ஆழ்த்தினார்.

கார் இல்லாத ஏழை எம்எல்ஏ போல என்ன வேண்டாம். இவர் ஏற்கெனவே Toyota Innova Crysta, Mercedes-Benz A-Class, Mercedes-Benz GLE 250, Volkswagen Ameo ஆகிய கார்களை வைத்துள்ளதாக தேர்தல் பத்திரம் கூறுகிறது. இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.333.94 கோடி.

சட்டமன்றத்துக்கே ஆட்டோவில் வந்து செல்வதாகப் பேசிய சபடி ஐயங்காரன், Tata Tigor (டாடா டிகோர்) கார் வைத்திருப்பதாக தேர்தல் பத்திரத்தில் கூறியிருக்கிறார். எனினும், சென்னைக்கு வரும்போது ரயிலில் வருவதாகப் பேசியுள்ளார்.

ஒரு கார் கூட இல்லாத உறுப்பினர்கள் எத்தனை பேர்?

தற்போது தமிழக சட்டமன்றத்தின் மொத்த பலம் 227. இதில், 6 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டனர்; இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், ஒரு தொகுதியை ராஜினாமா செய்துவிட்டார்.

இந்த 227 பேரில், 54 எம்.எல்.ஏ.க்களிடம் ஒரு கார் கூட இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கார்
கார்

வேட்புமனுத் தாக்கல் தரவுகளின்படி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் தற்போதைய அமைச்சர் மரிய வில்சன் வரை பலரிடம் சொந்தமாகக் கார் இல்லை என்றே கணக்குக் காட்டப்பட்டுள்ளது.

கட்சி வாரியாகப் பார்த்தால், தவெகவில் உள்ள 107 எம்.எல்.ஏ.க்களில் 32 பேரிடம் கார் இல்லை. திமுகவில் உள்ள 59 எம்.எல்.ஏ.க்களில் 9 பேரிடம் கார் இல்லை. அதிமுகவில் உள்ள 41 எம்.எல்.ஏ.க்களில் 8 பேரிடம் கார் இல்லை. விசிக, பாமக மற்றும் இடதுசாரிக் கட்சிகளில் தலா ஒருவரிடம் கார் இல்லை.

அரசு கார்கள் யாருக்கு பயன்படும்?

அரசு நடைமுறைப்படி அமைச்சர்களுக்கு ஏற்கெனவே கார் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், முதலமைச்சர் கூட அரசு வழங்கிய காரில் அல்லாமல், சொந்த சொகுசு கார்களில்தான் பயணிக்கிறார். அமைச்சர்கள் ஆதவ், மரிய வில்சன் போன்றோரும் அரசு கார்களில் பயணிப்பதில்லை.

இந்த நிலையில், ஏற்கெனவே 4, 5 கார்கள் வைத்திருக்கும் உறுப்பினர்கள் ஏன் அரசு வழங்கப்போகும் காரில் பயணிக்கப் போகிறார்கள்? ஆனால் அவர்கள் விண்ணபித்து கார் வாங்குவதை யார்தான் கேள்வி கேட்க முடியும்?

காமராஜ் போன்ற உறுப்பினர்கள் 'கெத்துக்காக' அரசு காரையும், அதனுடன் கிடைக்கும் ரூ.75,000 மாதாந்திர பராமரிப்புத் தொகையையும் வாங்கிக்கொள்ளலாம். (ஏற்கெனவே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.25,000 உதவித்தொகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.)

TVK Car Announcement
உதயநிதி vs ஆதவ் அர்ஜுனா: "கார் வேண்டாம், பங்களா மட்டும் வேண்டுமா?" - வெடித்த விவகாரம்!

எல்லா சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்குவது ஏதோ ஒருவகையில் மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாகவே இருக்கிறது. இருப்பினும், கார் இல்லாத சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களைச் சென்று சந்திக்கவும், சில நேரங்களில் அவசரமாகத் தலைநகருக்கு வரவும் கார் தேவை என்பதையும் மறுக்க முடியாது.

இந்த நிலையில், தகுதியான சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தேவைக்கு ஏற்ப கார் வழங்கலாம். அல்லது, கம்யூனிஸ்ட் தலைவர் பெ. சண்முகம் சொல்வதுபோல, கார் வாங்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடனுதவி வழங்கலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com