பிறப்புச் சான்றிதழில் பெயர், பிறந்த தேதி தவறாக இருக்கிறதா? திருத்தம் செய்வது எப்படி? எங்கே விண்ணப்பிக்க வேண்டும்?

பெயரில் சிறிய எழுத்துப்பிழையைத் திருத்துவதற்கும் முழுப் பெயரையும் மாற்றுவதற்கும் வேறுபாடு உள்ளது. முழுப் பெயர் மாற்றத்துக்கு வேறு நடைமுறையைப் பின்பற்ற வேண்டியிருக்கலாம்.
பிறப்புச் சான்றிதழில் பெயர், பிறந்த தேதி தவறாக இருக்கிறதா? திருத்தம் செய்வது எப்படி? எங்கே விண்ணப்பிக்க வேண்டும்?
பிறப்புச் சான்றிதழில் பெயர், பிறந்த தேதி தவறாக இருக்கிறதா? திருத்தம் செய்வது எப்படி? எங்கே விண்ணப்பிக்க வேண்டும்?AI Generated Image
Published on: 
Updated on: 
3 min read

ஒரு குடிமகன் பிறந்ததும் முதன்முதலில் வழங்கப்படுவது பிறப்புச் சான்றிதழ். இது நகராட்சி நிர்வாகம் அல்லது கிராம ஊராட்சியால் வழங்கப்படுகிறது.

பிறப்புச் சான்றிதழ் ஏன் அவசியம்?

பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பள்ளியில் சேருதல், திருமணம், தத்தெடுப்பு அல்லது பெயர் மாற்றம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான ஆவணங்களைப் பெறுவதற்குக்கூட பிறப்புச் சான்றிதழ் அவசியம். இதில் பிழைகள் இருந்தால், பின்னாளில் மற்ற ஆவணங்களைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். எனவே, பிறப்புச் சான்றிதழில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அவற்றை உடனடியாகத் திருத்திக்கொள்வது அவசியம்.

பிறப்புச் சான்றிதழில் இரண்டு முக்கியமான தகவல்கள் இடம்பெற்றிருக்கும். முதலாவது பிறந்த தேதி. ஒருவரின் வயதை உறுதிப்படுத்தும் முக்கிய ஆவணமாக இது பார்க்கப்படுகிறது. இரண்டாவது பெயர். பெயரில் எழுத்துப்பிழை, ஒற்றுப்பிழை போன்றவை இருந்தால் பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.

பிறப்புச் சான்றிதழில் பிழைகளைத் திருத்துவது எப்படி?

பிறப்புச் சான்றிதழில் உள்ள பெயரில் எழுத்துப்பிழை போன்ற சிறிய தவறுகளைச் சரிசெய்ய அரசிதழில் பெயர் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் பொதுவாக இல்லை. இதற்காக சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்புப் பதிவாளரை அணுக வேண்டும்.

குழந்தையின் பெற்றோரின் அடையாளச் சான்று, மருத்துவமனையில் பிறந்த குழந்தையாக இருந்தால் மருத்துவமனைப் பதிவுகள் அல்லது டிஸ்சார்ஜ் சம்மரி போன்ற ஆதாரங்களை இணைத்து விண்ணப்பிக்கலாம். சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களைப் பரிசீலித்து பதிவாளர் திருத்தம் மேற்கொள்வார்.

ஆனால் பெயரில் சிறிய எழுத்துப்பிழையைத் திருத்துவதற்கும் முழுப் பெயரையும் மாற்றுவதற்கும் வேறுபாடு உள்ளது. முழுப் பெயர் மாற்றத்துக்கு வேறு நடைமுறையைப் பின்பற்ற வேண்டியிருக்கலாம்.

அரசிதழில் பெயர் மாற்றுவது எப்படி?

பெயர் மாற்றத்துக்கு 18 வயதைப் பூர்த்தி செய்த நபர் தானே விண்ணப்பிக்கலாம். 18 வயதுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு பெற்றோர் விண்ணப்பிக்க வேண்டும்.

www.stationeryprinting.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பெயரை மாற்றிக்கொள்ள முடியும். அரசு கெசட்டில் உங்கள் பெயர் மாற்றம் வெளியிடப்படும். இதை வைத்து மற்ற ஆவணங்களிலும் பெயரை மாற்றிக்கொள்ளலாம்.

பெயர் மாற்றத்துக்கான விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் (அல்லது பெற்றோர்) எதற்காகப் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது என்பதற்கான காரணத்தைக் குறிப்பிட வேண்டும். நியூமராலஜி அல்லது புதிய பெயரின் மீதான ஈர்ப்பு போன்ற காரணங்களைக் குறிப்பிட்டாலே போதுமானது.

இதற்கான கட்டணத்தை இணையவழிச் செலுத்துச்சீட்டு (Online Challan / e-Challan) மூலம் மட்டுமே செலுத்த முடியும். ஆங்கிலத்தில் அரசிதழ் வெளியிட ரூ.750 மற்றும் தமிழில் வெளியிட ரூ.150 கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் www.karuvoolam.tn.gov.in என்ற வலைதளத்தில் 'Creation / Payment' என்ற Tab-ஐ தேர்வு செய்து, அதில் நட்சத்திரக் குறியிடப்பட்டுள்ள கலங்களில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை மட்டும் பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் பிரசுரக் கட்டணத்தை வங்கியில் செலுத்தி, கட்டணம் செலுத்தப்பட்டதற்கான செலுத்துச்சீட்டை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். (இந்த நடைமுறையில் சந்தேகம் இருந்தால் அரசு அதிகாரிகள் அல்லது இ-சேவை மையத்தை அணுகலாம்.)

பெயரை மாற்ற எந்தெந்த ஆவணங்களை இணைக்க வேண்டும்?

பெயர் மாற்றம் செய்வதற்கான ஆதாரமாக, பழைய பெயர் இடம்பெற்றுள்ள பிறப்புச் சான்றிதழ் நகல் / கல்விச் சான்றிதழ் நகல் / சாதிச் சான்றிதழ் நகல் ஆகியவற்றில் பொருத்தமான ஆவணத்தை இணைக்க வேண்டும். வீட்டு முகவரிக்கான ஆதாரமாக குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல், கடவுச்சீட்டு நகல் ஆகியவற்றில் பொருத்தமான ஆவணத்தின் சுயசான்றொப்பமிட்ட (கையெழுத்திட்ட) நகலை இணைக்க வேண்டும்.

குழந்தையைத் தத்தெடுத்ததன் காரணமாகப் பெயரை மாற்றுபவர்கள், தத்தெடுத்ததற்கான ஆவணத்தை இணைக்க வேண்டும். விவாகரத்து காரணமாகப் பெயரை மாற்றுபவர்கள், நீதிமன்றத் தீர்ப்பின் நகலைச் சுயசான்றொப்பமிட்டு இணைக்க வேண்டும்.

பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான அரசிதழ் நகல் 5, விண்ணப்பதாரரின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலும் விவரங்களை இந்தப் பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்: https://www.stationeryprinting.tn.gov.in/forms/Proforma-1E.pdf

பிறந்த தேதியை மாற்றுவது எப்படி?

பதிவாளர், அலுவலர் பிழையால் பலருக்கும் பிறந்த தேதியில் பிழை ஏற்படும். பிறப்பு சான்றிதழில் ஒருவாராகவும் மற்ற பள்ளி ஆவணங்களில் ஒருவாராகவும் இருக்கும்.

பிறந்த தேதியை மாற்றுவது குறிப்பாக 18 வயதுக்கு மேல் பிறந்த ஆண்டு அல்லது மாதத்தை மாற்றுவது மிகவும் கடினமான பணியாகும்.

ஏனென்றால் ஓய்வூதியம் பெறவும், அரசு வேலைக்கு விண்ணப்பிக்க பலரும் பிறந்த தேதியை மாற்றுவதும் நடந்து வருவதனால் இதில் மோசடி இல்லை என அரசு உறுதி செய்ய வேண்டும்.

பெயர் மாற்றம் உங்கள் விருப்பத் தேர்வை மாற்றுவதைப் போன்றது. ஆனால் பிறந்த தேதியை மாற்றுவது ஒரு உண்மையை மாற்றுவதாகும். எனவே இது ஒரு எழுத்தர், பதிவாளரின் கவனக் குறைவால் நடந்தது என்பதை நிரூபிக்க வலுவான சான்றுகள் வேண்டும்.

மருத்துவமனை பதிவுகள், பள்ளி மாற்றுச் சான்றிதழ், பாஸ்போர்ட் போன்றவை வலுவான சான்றிதழ்களாக இருக்கும். எனவே இரண்டு தேதிகளில் எதை அதிகாரப்பூர்வமான தேதியாக தேர்ந்தெடுப்பது என சந்தேகம் இருந்தால் முதல் மருத்துவமனை பதிவில் குறிப்பிட்டுள்ள தேதியை தேர்ந்தெடுக்கலாம். முதலில் பிறப்பு சான்றிதழை திருத்தி அதை வைத்து மற்ற ஆவணங்களைத் திருத்தலாம்.

ஆனால் இது எல்லாமும் இருந்தாலும் சில சூழல்களில் அரசு அதிகாரிகள் உங்களை நீதிமன்றத்தை நாட சொல்லலாம். வெளிநாடுவாழ் இந்தியர்கள் நிச்சயம் நீதி மன்றத்தை அணுகிதான் சரிசெய்ய முடியும்.

Q

1. பிறப்புச் சான்றிதழில் பெயரில் உள்ள எழுத்துப்பிழையை எப்படித் திருத்துவது?

A

பிறப்பு பதிவாளர், கிராம நிர்வாக அலுவலர் அல்லது சுகாதார ஆய்வாளரை அணுக வேண்டும். குழந்தையின் பெற்றோரின் அடையாள சான்று, மருத்துவமனையில் பிறந்த குழந்தை என்றால் டிஸ்சார்ஜ் சம்மரி போன்றவற்றை இணைத்து விண்ணப்பித்தால் சான்றிதழில் பெயர் மாற்றித் தருவார்கள்.

Q

2. பிறப்புச் சான்றிதழில் முழுப் பெயரையும் மாற்ற முடியுமா?

A

முடியும். அதற்காக அரசிதழில் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். www.stationeryprinting.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பித்து பெயரை மாற்றிக்கொள்ள முடியும்.

Q

3. தமிழக அரசிதழில் பெயர் மாற்றம் செய்ய எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?

A

அரசிதழில் பெயர் மாற்றத்தை ஆங்கிலத்தில் வெளியிட ரூ.750, தமிழில் வெளியிட ரூ.150 கட்டணம் செலுத்த வேண்டும்.

Q

4. பிறந்த தேதியில் உள்ள பிழையைத் திருத்த என்னென்ன ஆவணங்கள் தேவை?

A

மருத்துவமனைப் பிறப்புப் பதிவு, பள்ளிச் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட பிறந்த தேதியை உறுதிப்படுத்தும் ஆவணங்களை ஆதாரமாகச் சமர்ப்பிக்கலாம்.

Q

5. பிறப்புச் சான்றிதழில் பிறந்த தேதியை மாற்ற நீதிமன்றத்தை அணுக வேண்டுமா?

A

அனைத்து வழக்குகளிலும் நீதிமன்றத்தை அணுக வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்புப் பதிவாளர் ஆவணங்களைப் பரிசீலித்து முடிவெடுப்பார். சில சிக்கலான வழக்குகளில் நீதிமன்ற உத்தரவு தேவைப்படலாம்.