

சாம்பவர்வடகரையில் கடன் பிரச்சினையால் 9 வயது மகனுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை. உயிக்கு ஆபத்தான நிலையில் சிறுவன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை மாதாங்கோவில் தெருவில் வசித்து வருபவர் இராமலெட்சுமி. இவரின் மகள் உமா (வயது 31). இவருக்கும் சுந்தரபாண்டிபுரம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதியினருக்கு தர்சிக் முகுந்த் (9) என்ற மகனும் இருக்கிறார்.
இந்நிலையில் கோவிந்தராஜ் பாட்டாகுறிச்சி கிராமம் பாடசாலை தெருவை சேர்ந்த முத்தையா என்பவரது மகன் மகேந்திரன் என்பவரிடம் ரூ.5 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்த கடனுக்காக மனைவி உமாவின் தாயார் பெயரில் உள்ள வீட்டை கடந்த 2020-ம் ஆண்டு மகேந்திரன் கிரையம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில்தான் கடன் தொல்லையால் கோவிந்தராஜ் தலைமறைவாகி எங்கோ சென்றுவிட்டார். அவர் எங்கு இருக்கிறார் என இதுவரை தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடன் தொகை ரூ. 5 லட்சத்திற்கு பதிலாக 2022ம் ஆண்டு ரூ. 6 லட்சம் தருவதாக உமா தரப்பில் கூறியும் வீட்டை தரமறுத்த மகேந்திரன் கடந்த மாதம் ரூ. 8.50 லட்சம் தந்தால்தான் வீட்டை திருப்பி தருவதாக ஊர் பெரியவர்களை வைத்து பேசி ஒரு லட்சம் அட்வான்ஸ் பணத்தையும் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் உமா வீட்டிற்கு சென்ற மகேந்திரன் தனக்கு அந்த தொகை போதாது எனக் கூறியதுடன் வீட்டின் மின் இணைப்பை துண்டித்து சென்றதாகக் கூறப்படுகிறது.இது தொடர்பாக சாம்பவர்வடகரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வீடு பிரச்சினை தொடர்பாக நீதிமன்றம் மூலம் தீர்வு காணும்படி அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் 3 நாட்களுக்கு முன் சுரண்டையில் தான் வேலை பார்த்து வரும் நர்ஸிங் ஹோமிற்கு சென்று விட்டு உமா வந்தபோது உமாவை பொது இடத்தில் வைத்து தனது கூட்டாளிகளுடன் சென்ற மகேந்திரன் வீட்டை காலி செய்ய சொல்லி மிரட்டியதாக தனது தாயிடம் உமா மன வேதனையுடன் கூறிய புலம்பியுள்ளார்.
வாழ்க்கையில் விரக்தி அடைந்த உமா நேற்று தனது மகன் தர்சிக்முகுந்த்க்கு களைக் கொல்லி பூச்சி மருந்தை கொடுத்ததுடன் உமாவும் குடித்துள்ளார். மயங்கி கிடந்த தாய், மகன் இருவரையும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து தீவிர சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி உமா பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவன் தர்சிக்முகுந்த்க்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து உமாவின் தாய் ராமலெட்சுமி சாம்பவர் வடகரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் பெற்ற மகனுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சாம்பவர்வடகரை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.