

தஞ்சாவூரில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக திமுக நடத்திய போராட்டத்தில் பேசிய கருத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, சென்னை புறப்பட்ட அவர், வழியில் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து, தனது கைது நடவடிக்கை மற்றும் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "நான் யாரையும் தவறாக பேசவில்லை. முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாகத்தான் திமுக சார்பில் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் செய்தோம். காவிரி நதிநீர் பிரச்சினைக்காகவே இந்தப் போராட்டம் நடைபெற்றது. நான் பேசியதை தவறாகப் புரிந்துகொண்டு சிலர் விமர்சித்து வருவது வருத்தமளிக்கிறது" என்றார்.
மேலும், தனது பேச்சு குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு பதிலளித்த அவர், "நான் இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை. ஒற்றை அர்த்தத்தில்தான் பேசினேன். எனது பேச்சை திரித்து வேறு விதமாக சித்தரிக்க முயற்சி நடைபெறுகிறது. நான் யாரையும் தனிப்பட்ட முறையில் குறிவைத்து பேசவில்லை" என்று விளக்கம் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், "என் பேச்சுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த வரவேற்பை திசைதிருப்பும் முயற்சியாகவே தற்போது நடைபெறும் நடவடிக்கைகளை பார்க்கிறேன்" என்றும் கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். பின்னர் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் அவரிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவர் விடுவிக்கப்பட்டார். காவல் நிலையத்தில் இருந்து வெளியேறிய அவருக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையம் சென்றடைந்து, அங்கிருந்து சென்னை புறப்பட்டார்.
இந்த நிலையில், திருச்சி விமான நிலையத்தில் அவர் அளித்த விளக்கம் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.