சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்த விவகாரத்தில் ஆணையத்தின் 132 பக்க அறிக்கையை வெளியிட்டால் தமிழகத்தில் மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆர் ஜி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆர் ஜி ஆனந்த் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய ஆர்.ஜி.ஆனந்த், "இந்தியாவிலேயே முதல் முறையாக புதுக்கோட்டையில் ஜூன் மாதம் இரண்டாவது வாரம் ஆணையத்தின் சார்பில் சிறப்பு அமர்வு நடைபெற உள்ளது. அன்றைய தினம் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் தங்களுக்கு உள்ள குறைகள் புகார்கள் ஆகியவற்றை சிறப்பு அமர்வில் தெரிவிக்கலாம். அன்றைய தினமே அதற்குண்டான தீர்வுகள் விசாரணை நடத்தி மேற்கொள்ளப்படும். இந்தியாவிலேயே புதுக்கோட்டையில் தான் இந்த திட்டம் முதலாவதாக தொடங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு அமர்வு ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.
மேலும், சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்த விவகாரத்தில் ஆணையத்தின் 132 பக்க அறிக்கையை வெளியிட்டால் தமிழகத்தில் மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக் கூறிய அவர் சிதம்பரம் கோயிலின் சொத்துக்களை அபகரிப்பதற்காகவே தீட்சிதர்கள் மற்றும் குழந்தை திருமண விவகாரத்தையும் தமிழக அரசு பிரச்சனையாக மாற்றியுள்ளதாக குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து, சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடந்தது உண்மை சிறுமிகள் கொடுத்த ஆடியோ வீடியோ வாக்குமூலங்கள் ஆணையத்திடம் உள்ளது. திங்கள்கிழமை ஆளுநரிடமுன் அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் ஆணையத்தின் 132 பக்க அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் மூன்று மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் நேற்று ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடவடிக்கை எடுக்காமல் இருவிரல் பரிசோதனை விவகாரத்தை கையில் எடுத்து உண்மைக்கு புறமான தகவல்களை தெரிவித்து வருவதாக குற்றம் சாட்டிய அவர், சிதம்பரம் தீட்சிதர்கள் மற்றும் இரு விரல் பரிசோதனை குழந்தை திருமண விவகாரத்தில் நான் இரட்டை நிலைப்பாடு எடுக்கவில்லை நான் கூறிய கருத்துக்கள் முதல் நாள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு திருத்து கூறப்பட்டது, அதன் பின்னர் இது தெளிவு படுத்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க:நடுநிலைமை வகிக்குமா செங்கோல்?