பேச்சுரிமையை ஒடுக்கிவிட்டால் இந்த நாட்டில் ஜனநாயகம் பிழைக்காது...!! ப.சிதம்பரம்...!!

பேச்சுரிமையை ஒடுக்கிவிட்டால் இந்த நாட்டில் ஜனநாயகம் பிழைக்காது...!! ப.சிதம்பரம்...!!
Published on
Updated on
1 min read

பேச்சுரிமை என்ற குரல்வளையை ஒடுக்கிவிட்டால் இந்த நாட்டில் ஜனநாயகம் பிழைக்காது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே ராகுல்காந்தியின் எம்பி பதவியை பறித்த மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

திருமயம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராம.சுப்புராம் தலைமையில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்று உரையாற்றினார். இதில் அவர் பேசியதாவது," ராகுல்காந்தி பேசியதில் எந்த வகையான அவதூறும் இல்லை. பேசுவதற்கெல்லாம் அவதூறு வழக்கு தொடர்ந்தால் இந்த நாட்டில் ஒவ்வொரு நாளும் ஒரு கோடி வழக்குகள் தொடர வேண்டும். வாய்மொழி அவதூறுக்கெல்லாம் தண்டனை கிடையாது.

இந்திய குற்றவியல் சட்டம் 1860ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு 163 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த வழக்கிலும் வாய்மொழி அவதூறுக்காக இரண்டு வருடம் தண்டனை விதித்த சரித்திரமே கிடையாது. முதல் முறையாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 15 நாள் தண்டனை அல்லது ரூ 5000 அபராதம் மட்டுமே விதிக்கப்படும். இது விசித்திரமான வழக்கு. கர்நாடக மாநிலம் கோலாரில் பேசியதிற்கு குஜராத் மாநிலம் சூரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு 3 ஆண்டுகள் கிடப்பில் இருந்தது. ஒரு வருடம் விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 30 நாள்களில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது" என உரையாற்றினார். 

மேலும் "விசித்திரமான ஜனநாயக நாடாக இந்தியா மாறி வருகிறது. பேச்சுரிமை என்ற குரல்வளையை நெறித்துவிட்டால் இந்த நாட்டில் ஜனநாயகம் பிழைக்காது. நாம் கொஞ்சம் கண்ணை அசந்து விட்டால் பெற்ற சுதந்திரத்தை மீண்டும் இழக்க கூடிய வாய்ப்பு ஏற்படும் விபரீதம் ஏற்படும். அப்படி நாம் பெற்ற சுதந்திரத்தை இழந்து விட்டால் மீண்டும் ஒரு மகாத்மா காந்தி வந்து, மீண்டும் சுதந்திரத்தை பெற நூறு ஆண்டுகள் போராட வேண்டி இருக்கும். நாம் அனைவரும் மகாத்மா காந்தியின் வாரிசுகள் என்பதை உணர்ந்து பெற்ற சுதந்திரத்தை காக்க விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்" என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com