
2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.
எய்ம்ஸ் மருத்துவமனை:
மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், தற்போது வரை பணிகள் தொடங்கப்படாததால் மத்திய முதன்மைச் செயலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
மத்திய அரசு அறிக்கை தாக்கல்:
இந்நிலையில் மத்திய அரசு தரப்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஆயிரத்து 977 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், கட்டுவதற்கான காலம் மார்ச் 2021 முதல் அக்டோபர் 2026 வரை எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அதிக செலவு மற்றும் அதிக நேரத்திற்கான அனுமதிக்கு மத்திய சுகாதாரத்துறை அனுமதி வழங்கி செலவின துறை பரிசீலனையில் உள்ளதாகவும், எம்.பி.பி.எஸ் படிப்பு ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் தற்காலிக கட்டிடத்தில் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கூடாது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றம் உத்தரவு:
அதனை பரிசீலித்த நீதிமன்றம், 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிக்கப்படும் என்பது குறித்தான அறிக்கையை மத்திய முதன்மை செயலர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது.