

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த மேல்நிலைக் குடிநீர் தேக்கத் தொட்டியில் 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி மர்மநபர்கள் சிலர் மலத்தை கலந்து சென்றனர்.
பட்டியலினத்தைச் சேர்ந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், மலம் கலந்த தண்ணீரை அறியாமல் குடித்த ஐந்தாறு குழந்தைகள், முதியவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
அரசியல் வட்டாரத்தில் பெரும் விஸ்வரூபமெடுத்த இந்த விவகாரம் இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் தீர்வுகள் எட்டப்படவில்லை என்பதுதான் சோகம்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த கவிதா ராமு, காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தபோது அங்கு மலம் கலந்தது மட்டுமல்ல, பட்டியலின மக்களுக்கு எதிராக எத்தனையோ அநீதி இழைக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. தேநீர் கடைகளில் இரட்டைக்குவளை முறை, கோயில்களில் சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. குறிப்பாக கோயிலில் சாமியாடிய மாற்று சாதியைச் சேர்ந்த ஒருவர், சாமி தரிசனம் செய்ய வந்தவர்களை தரக்குறைவாக பேசி வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது.
நவீன காலத்திலும் நடந்த இந்த கேடுகெட்ட சம்பவங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரிப்பதும், அரசியல் பிரமுகர்கள் ஆதரவாக நிற்பதாக அறிக்கை விட்டு வந்தாலும், விசாரணையில் விரைவுத் தன்மையும் இல்லாமல் இருந்தது.
இதையடுத்து இந்த வழக்கை டிஜிபி சைலேந்திரபாபு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். இதற்கிடையே நாடாளுமன்றத் தேர்தலையே வேங்கை வயல் கிராமத்தினர் புறக்கணித்தனர். கடந்த 2 ஆண்டுகளாகவே வேங்கை வயல் கிராமத்தில் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும் இதுவரை எந்த தீர்வும் எட்டியதாக தெரியவில்லை.
வெளிமாவட்ட, வெளிமாநில ஏன், வெளிநாடுகளில் இருப்பவர்கள் கூட வேங்கை வயல் என்றால் ஒரு வித அருவெறுப்புடன் பார்ப்பதாக அந்த கிராமத்தினர் வேதனையில் துடிக்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க சம்பவத்தில் தொடர்புடைய முக்கியமான குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஆனால் அரசியல் காரணங்களுக்காக அவரை சிலர் மறைத்து வருகின்றனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. உயிரைக் கொல்வது மட்டும் கொலையாகி விடாது. உணர்வுகளைக் கொல்வதும், உரிமைகளைக் கொல்வதும் கொலைக்கு நிகர்தான். பட்டியலின மக்களை அடிமையாக நடத்தும் ஒரு சிலர் இன்னும் கம்பீரமாக உலா வரும் நிலையில் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து கேட்போரின் குரல்களை நெரிப்பதாகவே பார்க்கப்படுகிறது.