
தமிழ்நாட்டில் ஒரு மாதத்திற்கு பிறகு தேநீர் கடைகள், அழகு நிலையங்கள் மற்றும் சலூன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த மாதம் 10 தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனையடுத்து தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து, தேநீர் கடைகள் மற்றும் சலூன் கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில், ஏற்கனவே மளிகை கடைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் இன்று முதல் தேநீர் கடைகள், அழகு நிலையங்கள் மற்றும் சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தேநீர் கடைகளில் பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சென்னையின் முக்கிய சாலைப்பகுதிகளில் உள்ள டீக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
அதேபோல், அழகு நிலையங்கள் மற்றும் சலூன் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீத வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒரு மாதத்திற்கு பிறகு சலூன் கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் முடிதிருத்தம் செய்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், காலை வேளையில் தூய்மையான காற்றை சுவாசித்தபடி பொதுமக்கள் நடைப்பயிற்சியும் மேற்கொண்டனர்.