நம் கிரகத்தை சூழ்ந்துள்ள வளி மண்டலம் பல வாயுக் கலவைகளை உடையதாகும். இதில் 79 சதவிகித, நைட்ரஜனும் 20 சதவிகித ஆக்சிஜனும், 3 சதவிகித கரியமில வாயுவும், சிறிதளவு பிற வாயுக்களும் உள்ளன. வாயுக்களின் இந்த சமச்சீர்நிலை மாறாமல் இருக்கும் வரையில் வளி மண்டலம் எவ்வித பாதிப்பும் அடையாது. தொழில்மயமாதல், நவீனமயமாதல், வாகனத்தில் இருந்து வெளி வரும் புகை ஆகியவற்றால் வளி மண்டலம் பாதிப்படைந்து, காற்று மாசு ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கின்றன.
காற்று மாசுபாடு என்பது பல்வேறு திட துகள்கள் மற்றும் வாயுக்களின் கலவையாகும். அவை காற்றில் மாசுபடுத்தும் வடிவத்தில் மனிதர்களால் வெளியிடப்படுகின்றன. இந்த மாசுபாடுகள் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேலும் நம் சுற்றுப்புற சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும். காற்று மாசுபாட்டின் அபாயங்கள் உயிர்களுக்கு நோய்களையும் புவி வெப்பநிலை உயர்வையும் ஏற்படுத்தும்.
எனவே இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து நகரின் முக்கியமான 50 இடங்களில் சுற்றுபுற காற்றின் தர கண்காணிப்பு அமைப்புகளை நிறுவி, இதன் மூலம் காற்று மாசுபாட்டு அளவை கணக்கிட திட்டமிட்டுள்ளது.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக முதற்கட்டமாக 90 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. சென்னையின் முக்கிய நகரங்களில் காற்று மாசு எவ்வளவு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய ஐ.ஐ.டி- யிடம் பொறுப்பை வழங்கியுள்ளது. அவர்கள் தரும் ஆய்வு அறிக்கையை பொதுமக்கள் தெரிந்துக் கொள்ளும் வகையில் சாலை ஓரங்களில் மின்சார பலகை வைக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாகன ஓட்டிகள் அதிக நேரம் சிக்னலில் நிற்கும் போது வாகனத்தை அணைத்து வைக்க வேண்டும் என்றும், இதன் மூலம் நச்சுகள் அதிகளவு பரவுவதை தடுக்க முடியும் என்றும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து பகுதிகளிலும் காற்று மாசு சுத்தப்படுத்தும் கருவியை பொருத்துவதன் மூலம் மக்கள் நோயிலிருந்து விடுப்பட முடியும் என்றும், சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படும் என்றும் பொதுமக்கள் கருதுகின்றனர்.