திருப்பத்தை ஏற்படுத்திய காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர்.. யார் இந்த கிறிஸ்டோபர் திலக்?

காங்கிரஸ் கட்சியின் ஒரு எளிய தொண்டனாகத் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்..
திருப்பத்தை ஏற்படுத்திய காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர்.. யார் இந்த கிறிஸ்டோபர் திலக்?
Published on
Updated on
2 min read

தமிழக அரசியல் களத்தில் குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களிடையே தற்போது புதியதொரு உற்சாகம் பிறந்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, தனது மாநிலங்களவை வேட்பாளராக திருச்சியின் மைந்தரான கிறிஸ்டோபர் திலக்கை அறிவித்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும். மிக நீண்ட காலமாக கட்சியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இவருக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், இளைய தலைமுறை மற்றும் அடிமட்ட தொண்டர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஊக்கமளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.

பொறியியல் பட்டதாரியான திலக், பின்னர் வணிக மேலாண்மைத் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.தன்னுடைய கல்வித் தகுதிக்கு ஏற்ப ஒரு முன்னணி நிறுவனத்தில் உயர் பதவியில் பணியாற்றி வந்த கிறிஸ்டோபர் திலக், சமூகத்தின் மீதும் அரசியலின் மீதும் கொண்ட தீராத ஆர்வத்தால் தனது கைநிறைய சம்பளம் கொடுத்த அந்தப் பணியைத் துறந்தார். மக்கள் சேவைக்காக முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடிவெடுத்த அவர், காங்கிரஸ் கட்சியின் ஒரு எளிய தொண்டனாகத் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.

எந்தப் பின்புலமும் இன்றி உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு அவர் மெல்ல மெல்லக் கட்சியில் பல முக்கிய பொறுப்புகளை வகிக்கத் தொடங்கினார். இவரது இந்த அர்ப்பணிப்பு உணர்வு அகில இந்தியத் தலைமை வரை கவனத்தை ஈர்த்தது.அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகப் பதவி உயர்வு பெற்ற திலக், வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் மற்றும் நாகாலாந்து போன்றவற்றில் கட்சியின் செயல்பாடுகளை முன்னெடுக்கும் பொறுப்பைப் பெற்றார். இந்த மாநிலங்களில் நிலவும் சிக்கலான அரசியல் சூழலிலும், கடுமையான புவியியல் சவால்களிலும் திலக் ஆற்றிய பணிகள் வியப்பிற்குரியவை.

அங்கு நிலவிய அசாதாரண சூழ்நிலைகளிலும் தளராத உறுதியுடன் களப்பணி ஆற்றியதுடன், கட்சித் தொண்டர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை மிகச் சிறப்பாக வழங்கினார். இக்கட்டான நேரங்களில் இவர் காட்டிய நிதானமும் தலைமைப் பண்பும் அகில இந்தியத் தலைமையின் பெரும் பாராட்டுகளைப் பெற்றன.ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரிய மற்றும் மிகவும் பிடித்தமான இளம் தலைவர்கள் பட்டியலில் கிறிஸ்டோபர் திலக் முன்னணியில் உள்ளார். அகில இந்தியத் தலைவரின் நேரடிப் பார்வையில் பல்வேறு களப்பணிகளில் இவர் ஆற்றிய பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது.

வடகிழக்கு மாநிலங்களில் இவர் காட்டிய கடின உழைப்பிற்கு ஒரு பரிசாகவே தற்போது மாநிலங்களவை வேட்பாளர் பதவி வழங்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் திருச்சியில் இருந்து சென்று தேசிய அளவில் கட்சிப் பணியாற்றி, இன்று டெல்லி மேலவைக்குத் தேர்வாகும் அளவிற்குத் திலக் வளர்ந்திருப்பது பலருக்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது.தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குச் செல்பவர்கள் பொதுவாக மூத்த தலைவர்களாகவோ அல்லது பல செல்வாக்கு மிக்க பின்புலம் கொண்டவர்களாகவோ இருப்பார்கள் என்ற நிலையை மாற்றி, உழைப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் கிறிஸ்டோபர் திலக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com