முசிறியில் எம்ஜிஆர் காலத்து செல்வாக்கு திரும்புமா? திமுக கோட்டைக்குள் நுழையும் அதிமுக! கருத்துக்கணிப்பு முடிவுகள்

விவசாயக் குடும்பங்களை தற்போதைய அரசுக்கு எதிராகச் சிந்திக்க வைப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது...
musiri constituency
musiri constituency
Published on
Updated on
2 min read

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தின் காவேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முசிறி தொகுதி, ஆன்மீகமும் விவசாயமும் கலந்த ஒரு பகுதியாகும். மறைந்த முதல்வர் எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக விளங்கிய முசிறி, கடந்த 2021 தேர்தலில் திமுக வசம் சென்றது. தற்போது அங்கு நிலவும் அரசியல் சூழல் மீண்டும் அதிமுகவிற்குச் சாதகமாகத் திரும்புவதை இந்த ஆய்வு முடிவுகள் உறுதி செய்கின்றன.

முசிறி தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களை ஆராய்ந்தால், 41 முதல் 60 வயதுடையவர்கள் 37.2 சதவீதத்தோடு முதலிடத்தில் உள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 21 சதவீதமும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 28.5 சதவீதமும் உள்ளனர். சமூக ரீதியாக முத்தரையர்கள் 24 சதவீதத்தோடு பெரும்பான்மையாக உள்ளனர். சோழிய வெள்ளாளர்கள் 20 சதவீதமும், கவுண்டர்கள் 10 சதவீதமும், தேவேந்திர குல வேளாளர்கள் 10 சதவீதமும், ஆதிதிராவிடர்கள் 8 சதவீதமும் உள்ளனர். 72 சதவீத கிராமப்புற வாக்குகளைக் கொண்ட இந்தத் தொகுதியில் முத்தரையர் மற்றும் வெள்ளாளர் சமூக வாக்குகளே வெற்றியாளரைத் தீர்மானிக்கின்றன.

முசிறி தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாக முசிறி நகரின் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் 9.3 கி.மீ புறவழிச்சாலை பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் இருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளுக்கான நேரடிச் சந்தை வசதி இல்லாமை, காய்கறி சாகுபடிக்கு இடைத்தரகர்களால் ஏற்படும் நஷ்டம் மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு போன்றவை முக்கியப் புகார்களாக உள்ளன. குறிப்பாகக் கால்நடைத் தீவன விலையேற்றம் மற்றும் கிராமப்புறச் சாலைகளின் அவலநிலை போன்றவை விவசாயக் குடும்பங்களை தற்போதைய அரசுக்கு எதிராகச் சிந்திக்க வைப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.

தேர்தல் புள்ளிவிவரங்களின்படி, 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக இங்கு 50.7 சதவீத வாக்குகளைப் பெற்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இது 51.5 சதவீதமாகச் சற்றே அதிகரித்துள்ளது. அதிமுக 2021-ல் 35.7 சதவீத வாக்குகளைப் பெற்று, 2024-ல் 34.4 சதவீதமாகச் சற்றே சரிந்துள்ளது. பூத் அளவில் பார்த்தால், 2021-ல் திமுக 122 பூத்களில் வலுவாக இருந்தது, 2024-ல் அது 144 ஆக அதிகரித்துள்ளது. அதிமுக 2021-ல் 91 பூத்களில் வலுவாக இருந்த நிலையில், 2024-ல் 82 பூத்களாகக் குறைந்துள்ளது. சுமார் 43 பூத்கள் இன்னும் எந்தப் பக்கமும் சாராத 'ஸ்விங்' நிலையில் உள்ளன.

தற்போது வெளியாகியுள்ள 2026 தேர்தல் கணிப்பின்படி, முசிறியில் அதிமுக 140 வாக்குச்சாவடிகளில் வலுவாக இருப்பதாகத் தெரிகிறது. திமுக 100 வாக்குச்சாவடிகளில் மட்டுமே வலுவாக உள்ளது. சுமார் 40 வாக்குச்சாவடிகள் ஸ்விங் நிலையில் உள்ளன. கான்சிலிடிக்ஸ் குழுவின் கணிப்புப்படி, அதிமுக 36 சதவீத வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடிக்கும் எனத் தெரிகிறது. திமுக 32 சதவீத வாக்குகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கூட்டணி 25 சதவீத வாக்குகளைப் பெறும். சுமார் 4 சதவீத வெற்றி வித்தியாசத்தில் அதிமுக இழந்த கோட்டையை மீட்க அதிக வாய்ப்புள்ளதாக இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com