ஜெயங்கொண்டத்தில் யாருக்கு வெற்றி? "மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" கருத்துக்கணிப்பு முடிவுகள்

சாலை வசதிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாமை போன்ற...
ஜெயங்கொண்டான் சட்டமன்ற தொகுதி
ஜெயங்கொண்டான்
Published on
Updated on
2 min read

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. அரியலூர் மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதியான ஜெயங்கொண்டம், நீண்டகாலமாக வன்னியர் சமூகத்தின் அரசியல் மையப்புள்ளியாகத் திகழ்கிறது. நிலக்கரி சுரங்கப் பாதிப்புகள் மற்றும் முந்திரி விவசாயிகளின் கோரிக்கைகள் இந்தத் தொகுதியின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணிகளாக உள்ளன. தற்போதைய அரசியல் சூழலில், ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே இங்கே மிகக் கடுமையான போட்டி நிலவுவதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

இந்தத் தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்கள் என்று பார்த்தால், 41 முதல் 60 வயதுடையவர்கள் 38.5 சதவீதத்தோடு முதலிடத்தில் உள்ளனர். அடுத்தபடியாக 26 முதல் 40 வயதுடையவர்கள் 32.2 சதவீதமும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 16.8 சதவீதமும் உள்ளனர். சமூக ரீதியான சமன்பாடுகளில் வன்னியர்கள் 35 சதவீதத்தோடு பெரும்பான்மையாக உள்ளனர். ஆதிதிராவிடர்கள் 22 சதவீதமும், முதலியார்கள் 12 சதவீதமும், இதர சமூகத்தினர் 31 சதவீதமும் வசிக்கின்றனர். 92 சதவீத கிராமப்புற வாக்குகளைக் கொண்ட இந்தத் தொகுதியில், விவசாயிகளின் வாக்குகள் தான் எப்போதும் ஆட்சியைத் தீர்மானிக்கின்றன.

முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாகப் பொதுமக்கள் முன்வைப்பது, என்.எல்.சி (NLC) நிறுவனத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு முறையான இழப்பீடு வழங்கப்படாதது மற்றும் வேலைவாய்ப்பு மறுக்கப்படுவது ஆகும். முந்திரி விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காதது மற்றும் பாசன நீர் ஆதாரங்கள் தூர்வாரப்படாதது பெரும் குறையாக உள்ளது. சாலை வசதிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாமை போன்ற அடிப்படைத் தேவைகளும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று மக்கள் குமுறுகின்றனர்.

ஜெயங்கொண்டான் தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

தேர்தல் முடிவுகளின் ஒப்பீட்டைப் பார்த்தால், 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக 46.8 சதவீத வாக்குகளைப் பெற்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இது 45.2 சதவீதமாகச் சற்றே சரிந்துள்ளது. மறுபுறம் அதிமுக 2021-ல் 44.5 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், 2024-ல் 47.8 சதவீதமாகத் தனது செல்வாக்கை உயர்த்தியுள்ளது. பூத் அளவிலான தரவுகளைப் பார்க்கும்போது, 2024-ல் திமுக 122 பூத்களில் வலுவாக உள்ளது. அதிமுக 2021-ல் 110 பூத்களில் வலுவாக இருந்த நிலையில், 2024-ல் 135 பூத்களாகத் தனது பலத்தை அதிகரித்துள்ளது. சுமார் 35 பூத்கள் 'ஸ்விங்' நிலையில் உள்ளன.

மிக முக்கியமாக 2026 தேர்தல் கணிப்பின்படி, ஜெயங்கொண்டத்தில் அதிமுக 130 வாக்குச்சாவடிகளில் வலுவாகவும், 90 இடங்களில் பலவீனமாகவும் உள்ளது. திமுக 105 வாக்குச்சாவடிகளில் தனது பலத்தைக் கொண்டுள்ளது. சுமார் 85 வாக்குச்சாவடிகள் இன்னும் யாருக்கு வாக்களிப்பது என்பதில் ஊசலாடும் நிலையில் உள்ளன. கான்சிலிடிக்ஸ் குழுவின் ஆய்வின்படி, 2026 தேர்தலில் அதிமுக 35 சதவீத வாக்குகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக 32 சதவீத வாக்குகளைப் பெறும் நிலையில் உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி இணைந்து 26 சதவீத வாக்குகளைப் பிரிக்க வாய்ப்புள்ளது. வெற்றி வித்தியாசம் சுமார் 3 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்பதால், களப்பணி மிக அவசியமாகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com