சினிமாவில் ஆட்டம் காண்கிறதா அஜித்தின் "பொசிஷன்" - டாப் 3-க்குள் நுழைய.. பக்காவாக காய் நகர்த்தும் ஹீரோ!

இப்போது, லண்டனில் இருவரும் கட்டியணைத்ததன் பின்னால் பல்வேறு லாப - நட்டக் கணக்குகள் சொல்லப்படுகின்றன. அவற்றைக் கடந்து, இது அஜித்தின் திரைப் பயணத்தில் எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது?
சினிமாவில் ஆட்டம் காண்கிறதா அஜித்தின் "பொசிஷன்" - டாப் 3-க்குள் நுழைய.. பக்காவாக காய் நகர்த்தும் ஹீரோ!
சினிமாவில் ஆட்டம் காண்கிறதா அஜித்தின் "பொசிஷன்" - டாப் 3-க்குள் நுழைய.. பக்காவாக காய் நகர்த்தும் ஹீரோ!
Published on
Updated on
4 min read

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ஜனநாயகன் கடந்த ஜூலை மாதம் வெளியானது. அத்துடன் அவரது திரைப் பயணம் முடிவடைந்துவிட்டது. அரசியலில் காலடி எடுத்துவைத்த விஜய், எதிர்பாராத வெற்றியைப் பெற்று முதலமைச்சராகப் பதவி வகித்து வருகிறார்.

முதலமைச்சர் விஜய், லண்டன் பயணத்தின்போது திரைத்துறையில் அவரது நீண்டகாலப் போட்டியாளராக இருந்த அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தைத் தொடங்கி வைத்தார்.

மைதானத்துக்குள் நுழைந்த விஜய், அஜித்தை நோக்கி ஓடிச் சென்று கட்டித் தழுவி, தோளில் முத்தமிடும் வீடியோ இணையத்தில் வைரலானது. விஜய், அஜித்தின் காரில் அமர்ந்து போட்டோ ஷூட் செய்துகொண்டார். இருவரும் தேசியக் கொடியுடன் போஸ் கொடுத்தனர். அஜித், விஜய்யைக் காரில் ஏற்றி மைதானத்தைச் சுற்றி வந்தார். இருவரும் பரிசுகளைப் பரிமாறி, அன்பை வாரி வழங்கிக்கொண்டனர். இவை அனைத்தும் கச்சிதமான சினிமா பாணியில் படம்பிடிக்கப்பட்டு, சிறப்பான போஸ்ட் புரொடக்ஷனுக்குப் பிறகு வெளியானது.

இந்த வீடியோவுக்கு, தவெக ஆதரவாளர்கள், அதாவது விஜய் ரசிகர்கள், சில மாதங்களுக்கு முன்புவரை அஜித்தை விமர்சித்து வந்தவர்கள், பெருவாரியாக ஆதரவளித்து பகிர்ந்துள்ளனர். ஆனால், தொடக்கம் முதலே அஜித்தின் ரசிகர்களாக இருந்து, இன்றும் அவரது படத்துக்காகக் காத்திருப்பவர்கள் இதை எப்படிக் கொண்டாடினர் என்பது முக்கியமான கேள்வி.

ரசிக சண்டைகள் முதல் லண்டன் சந்திப்பு வரை

விஜய் - அஜித் என்ற இரண்டு துருவங்கள் இன்று ஒன்றிணைந்துள்ளன. திரைத்துறையில் வளர்ந்து வந்தபோது, இருவரும் தங்கள் படப் பாடல்களில், வசனங்களில் ஒருவரை ஒருவர் மறைமுகமாகக் குறிப்பிட்டு விமர்சித்திருக்கின்றனர். இது அவர்களது ரசிகர்களுக்குள் சச்சரவுகள் எழவும் காரணமாக இருந்துள்ளது.

2010-ஆம் ஆண்டு அஜித் தனது ரசிகர் மன்றத்தைக் கலைத்தாலும், ரசிகர்களுக்கு இடையிலான மோதல் தீரவில்லை. இரண்டு நடிகர்களும் 50 வயதை நெருங்க நெருங்க மோதல்கள் குறைந்தன. விஜய் தனது மாஸ்டர் பட ஆடியோ லான்ச்சில், "நண்பர் அஜித் மாதிரி கோட் சூட் அணிந்து வந்தேன்" எனப் பேசினார். ஆனாலும், ரசிகர்களுக்கு இடையிலான மோதல் மட்டும் இன்றளவும் நீடித்து வந்திருக்கிறது.

விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு, நேர்காணல்களில் "தான் விஜய்க்கு நல்லதே நினைப்பதாக" அஜித் பேசியிருந்தார். தேர்தலுக்குப் பிறகு, நடிகர் அஜித்தின் தாயார் இறந்தபோது நேரில் சென்று ஆறுதல் கூறினார் விஜய். விஜய் அரசின் ஸ்போர்ட்ஸ் சிட்டி முன்னெடுப்புக்கு அஜித் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அஜித் - விஜய்
அஜித் - விஜய்

இப்போது, லண்டனில் இருவரும் கட்டியணைத்ததன் பின்னால் பல்வேறு லாப - நட்டக் கணக்குகள் சொல்லப்படுகின்றன. அவற்றைக் கடந்து, இது அஜித்தின் திரைப் பயணத்தில் எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதை அறியலாம்.

அஜித் ரசிகர்கள் அதிருப்தி?

இன்றைய தமிழ் திரையுலகில் ரஜினிக்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அஜித் உள்ளார். துப்பாக்கிச் சுடுதல், கார் பந்தயம் என அவருக்குப் பல துறைகளில் நாட்டம் இருந்தாலும், திரை நட்சத்திரம் என்பதுதான் அவரது அடையாளம்.

நவம்பர் 2-ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் டேர் டெவில் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதற்கான சிறப்பு போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. பொதுவாக, அஜித் படங்களின் அப்டேட்டுகள் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகும். ஆனால், இந்த முறை போஸ்டர் வரும்போதும் விஜய்யுடன் கைகோர்த்தது பற்றிய பேச்சுகளே இணையத்தை நிறைத்திருந்தன.

விஜய் சினிமாவில் இருந்து வெளியேறிய பிறகு, இரு துருவங்களாக இருந்த முதல் இடத்தை அஜித் தனியாக நிரப்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், அஜித் அதற்கு மாறாக, கார் பந்தயத்திலேயே அதிக கவனம் செலுத்தினார்.

விஜய் ரசிகர்கள் அஜித்தை விமர்சித்ததற்குச் சற்றும் குறையாமல், அஜித் ரசிகர்களும் விஜய்யை விமர்சித்து வந்துள்ளனர். இந்த நிலையில், லண்டன் சந்திப்பு அஜித் ரசிகர்களின் அதிருப்தியை மேலும் ஆழமாக்கியிருக்கிறது.

இருவரும் நண்பர்களாக இருந்தாலும் லண்டன் சந்திப்பின் அரசியல் முக்கியத்துவத்தை அறிந்த தவெகவினர் அதை வரவேற்றனர். ஆனால் விஜய் அதிகாரத்துக்கு வந்த பிறகு அஜித் அவருடன் நெருங்கி உறவாடுவதை அவரது ரசிகர்களால் ரசிக்க முடியவில்லை என்பதையே சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது.

அஜித்தின் 63-வது படமான குட் பேட் அக்லி வெளியாகி ஓராண்டு கடந்த நிலையில், இப்போதுதான் அடுத்த படப்பிடிப்புக்கான தேதியே அறிவிக்கப்பட்டுள்ளது. காரில் அவர் மின்னல் வேகத்தில் பறந்தாலும், சினிமா பணிகள் ஆமை வேகத்தில்தான் நகருகின்றன. ஆனால், தமிழ் சினிமாவின் முதலிடம் யாருக்காகவும் காத்திருக்காது.

சினிமா என்ற மியூசிக்கல் சேர்!

அஜித் சினிமாவைத் தாண்டி தனது ஆர்வத்தை விரிவுபடுத்தியபோதே, தமிழ் சினிமாவில் விஜய் - ரஜினி என்ற இரு துருவங்களுக்கிடையிலான போட்டி எழுந்தது. விஜய் - அஜித் - ரஜினி என்ற டாப் 3ல் எந்த இரு துருவங்கள் மோதிக்கொள்கின்றன என்பது முக்கியமானது.

சினிமாவில் அஜித் இன்று இருக்கும் இடம் அவருக்கு சாதாரணமாகக் கிடைத்தது அல்ல. விடாமுயற்சி, கடின உழைப்புடன் எக்கச்சக்கமான தியாகங்களும் உள்ளன. ஆனால், இந்த இடம் யாருக்கும் நிலையானது அல்ல. இதில் நிலைத்திருக்க யாராக இருந்தாலும் கடுமையாகப் போராடியாக வேண்டும். அதைத்தான் தனது 75 வயதிலும் செய்து வருகிறார் ரஜினிகாந்த்.

சிவகார்த்திகேயன் - அஜித்
சிவகார்த்திகேயன் - அஜித்

விஜய் விட்டுச் சென்ற இடத்தை நிரப்பப்போகும் அடுத்த ஹீரோ யார் என்ற கேள்வி எழுவதற்கே அஜித்தான் காரணம். அவர் தனது சிம்மாசனத்திலிருந்து விலகிச் செல்கிறார். கொஞ்சம் கொஞ்சமாகத் தனது ரசிகர்கள் மனதிலிருந்தும் விலகுவாரோ என்ற அச்சத்தை அவரது நடவடிக்கைகள் ஏற்படுத்தியிருக்கின்றன. அஜித்தின் பெண் ரசிகர்களும் குழந்தைகளும் அவரை ரசித்துப் பார்த்தது எந்தப் படத்தில் என்பதை நினைவுபடுத்துவது கடினமானதாக ஆகியிருக்கிறது.

சினிமாவில் நம்பர் 1 ஸ்டார் என்ற சிம்மாசனம் ஒரு மியூசிக்கல் சேர். அதைப் பிடித்து வைத்திருக்க நிற்காமல் ஓட வேண்டும். அதற்காகத்தான் ஜெயிலர், தர்மன், கமல் ஹாசனுடனான படம் என லைன் அப்புகளைச் செட் செய்திருக்கிறார் ரஜினி.

இந்த ஆண்டு கருப்பு, விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, சீன் படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி இருக்கிறார் சூர்யா. இன்னும் தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம், சிம்பு ஆகியோரும் அந்த நாற்காலியைச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

மறுபக்கம், அஜித்தோ விஸ்வாசம் படத்துக்குப் பிறகு, தமிழ்நாடே கொண்டாடும் வகையில் ஒரு வெற்றிப் படத்தை உருவாக்கவில்லை. எச். வினோத்துடனான படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தாலும், பொதுமக்களையும் குடும்பங்களையும் சென்றடையத் தவறியது. குட் பேட் அக்லி ரசிகர்களுக்குப் பெரும் கொண்டாட்டமாக அமைந்தாலும், அது ஒரு ஆறுதல் வெற்றியாகத்தான் பார்க்கப்படுகிறது.

அஜித்
அஜித்

அஜித் ஒரு ரேஸ் வீரர் மட்டுமல்ல; ஒரு அணியை நடத்தும் உரிமையாளரும் கூட. ஒரு கார் பந்தய அணியை நடத்துவது என்பது சாதாரண காரியம் அல்ல. அதீத நேரத்தையும், பணத்தையும், கவனத்தையும் கோரும் வேலை அது. அதிலிருந்து பிரேக் எடுத்து மட்டுமே சினிமாவில் நடிக்க முடியும் என்ற நிலை நீடித்தால், அஜித் அவரது இடத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.

சினிமாவில் அஜித்துக்கு தேவை ஒரு புறக்கணிக்க முடியாத வெற்றி. ரசிகர்கள் மட்டுமல்லாமல், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடனமாட வைக்கும் கொண்டாட்டமான திரைப்படம். அந்த மேஜிக்கை செய்வது அவருக்கு மிக எளிதான காரியம். அவரது ஸ்டைலும் அழகும் என்றும் மாறாதது.

அஜித் அரசியலுக்கு வந்தால் விஜய்யின் அரசியல் வாழ்க்கை அஸ்தமித்துவிடும் என திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருந்தார். அது எவ்வளவு தீர்க்கமானது எனத் தெரியவில்லை. ஆனால், அஜித் முழுமையான அர்ப்பணிப்புடன் அடுத்தடுத்த படங்களில் நடித்தால், அவர் அடையும் உச்சத்தை யாராலும் நெருங்க முடியாது என்பது தீர்க்கமான உண்மை. அதைக் கொடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

சினிமாவில் ஆட்டம் காண்கிறதா அஜித்தின் "பொசிஷன்" - டாப் 3-க்குள் நுழைய.. பக்காவாக காய் நகர்த்தும் ஹீரோ!
ராஜீவ் காதல் முதல் பிரதமர் பதவி வரை... சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக்கம்! பென்குயின் சிக்கல் தீர்ந்ததா?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com