
2026 -ஆவது சட்டமன்ற தேர்தல் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே சொல்லலாம். இந்த தேர்தல் களத்தில் புது வரவு என்றால் அது ‘தமிழக வெற்றி கழகம்’ தான். விஜய் -ன் அரசியல் பிரவேசம், ஆதவ் அர்ஜுனா பிரஷாந்த் கிஷோர் ஆகியோரின் பங்களிப்பு என நல்ல ஒரு பப்ளிசிட்டியோடே வந்தது.
விஜய் அரசியலில் குதிப்பார் என்று நினைத்தது இன்று நேற்றல்ல 2013 ஆம் ஆண்டு தலைவா படம் வெளியாகி “time to lead” என கேப்ஷன் வைத்து அதற்காக அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை கடுப்பேற்றி மன்னிப்பு கேட்ட விவகாரமெல்லாம் அவரின் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தின. ஆனால் அவரோ “ஓடு மீன் ஓட உறுமீன் வருமென” காத்திருந்த கொக்குபோல காத்திருந்து அரசியலில் குதித்துள்ளார்.
அரசியல் எதிரியாக திமுக -வையும் கொள்கை எதிரியாக பாஜகவையும் முன்னிருத்தி தன் அரசியல் பயணத்தை துவங்கியுள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் முழுமூச்சாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் விஜய், தவெக சார்பில் மதுரையில் மிகப்பெரிய 2 -வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது.
ரசிகர் கூட்டமா? கொள்கை கூடமா?
விஜய் -ன் ரசிகர்கள் மீது எழும் விமர்சனம் எல்லாவற்றுக்கு பல நேரங்களில் அவர்களே காரணமாக அமைந்துவிடுகின்றனர். எவ்வளவோ அறிவிப்புகள் வெளியிட்டும் இந்த மாநாட்டிற்கு கைக்குழந்தைகளை கொண்டு வந்தனர். அதுமட்டுமின்றி தவெக மாநாட்டில் நிர்வாகிகளுக்கு இருக்கும் இன்னும் பெரிய பிரச்சனைகள் நாற்காலிகள், இம்முறை கூட 1000 கணக்கான நாற்காலிகளை உடைத்துவிட்டனர்.
இதையெல்லாம் விட சோகமான விஷயம் என்னவென்றால், மாநாட்டின் நோக்கமே தீர்மானமோ, கொள்கையோ, அறிக்கையோ இல்லை. விஜயை பார்ப்பது மட்டும்தான். 3.50 -க்கு விஜய் உள்ளே நுழைந்ததும், ‘உங்கள் விஜய்’ பாடல் ஒலித்தது. அந்த பாடலை விஜஎ பாடியிருந்தார்.
தொடர்ந்து மேடையில் இருந்து இறங்கி மக்கள் மத்தியில் ராம்ப் வாக் சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். அவ்வளவுதான் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் களைய துவங்கினர், இதுதான் மாநாட்டில் விழுந்த முதல் அடி. தண்ணி பிரச்சனை, வெயில் பிரச்சனை எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், ‘மாநாட்டின் நோக்கமே’ அரசியல்படுவதற்குத்தான் என்ற புரிதல் இல்லாமல் தவெக -வினர் நடந்துகொண்டதாகதான் புரிந்துகொள்ள முடியும்.
முதிர்ச்சியற்ற விஜய் -ன் பேச்சு!
2 மணி நேர மாநாட்டில் 35 நிமிடங்கள் விஜய் பேசியிருந்தார். அந்த 35 நிமிட பேச்சும் தீர்க்கமற்றதாகவே இருந்தது. இவர் ஏற்கனவே தனது கொள்கை தலைவராக அண்ணல் அம்பேத்கர், காமராஜர், பெரியார், அஞ்சலை அம்மாள், வேலுநாச்சியார் ஆகியோரை கைக்கொண்டிருக்கும்போது, அண்ணாவையும், எம்,ஜி.ஆர் -ஐயும் குறிப்பிட்டு பேசுவதோடு மட்டுமல்லாமல் அவர்களை போன்றே ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவேன் என கூறினார். இது அவரின் தெளிவற்ற முதிர்ச்சியற்ற போக்கையே காட்டுகிறது.
மேலும் அவர் பேசுகையில், சிங்கம் ஒரு பெக்யுலர் ஆன விலங்கு.. வேட்டையாடத்தான் வரும். வேடிக்கை பார்க்கலாம் வராது. சிங்கத்துக்கு தனியாவும் இருக்க தெரியும், கூட்டமாவும் இருக்க தெரியும். தனியா வந்துதான் தண்ணி காட்டும். ‘A lion is always a lion’’ என பேசியுள்ளார். அவர் மேல் இருக்கும் மிகப்பெரிய விமர்சனமே அவர் களப்பணி செய்யவில்லை, மக்களை சந்திக்கவில்லை என்பதுதானே? அவர் மீது விழும் விமர்சனத்திற்கு எல்லாம் அவர் இந்த மாநாட்டில் பதில் சொல்லியுள்ளார் என தவெக -வினர் பேசியுள்ளனர், ஒருவேளை அவர் மக்களை சந்திக்கவில்லை என்ற விமர்சனத்திற்கு இதுதான் பதில் என்றால், ராஜா (சிங்கம்) மனநிலையில் இருக்கும் ஒருவர் எப்படி ஜனநாயகமான ஆட்சியை மக்களுக்கு வழங்க முடியும். மேலும் சிங்கம் என்ற மன நிலையே superior மன நிலை. அனைவரும் சமம் என்ற அரசியலை முன்னெடுக்கும் ஒரு தலைவர் எப்படி superior, savior complex -ல் இருக்க முடியும். மக்கள் பணி என்பது அவர்களை ஆளுவது மட்டுமல்ல என்பதை விஜய் எப்போது புரிந்துகொள்ள போகிறார்கள் என தெரியவில்லை,
இதையெல்லாம் விட பெரிய கூத்து விஜய் பேசும்போது, பொதுச்செயலாளர் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உட்பட அனைவரும் நின்றுகொண்டே இருந்தனர். விஜய் ‘மன்னர் ஆட்சி’ என விமர்சிக்கும் திமுக -வில் கூட இப்படி ஒரு நிலை இல்லை என்பதுதான் நிதர்சனம். தவிர இவர்கள் எதிராளி மீது எந்தெந்த குற்றம் எல்லாம் சுமத்துகிறார்களோ அதெல்லாம் இவர்களும் செய்கின்றார். என்ன இவர்கள் மீது இன்னும் ஊழல் புகார் இல்லை. அதற்கு காரணமும் இருக்கிறது, அவர்கள் இன்னும் ஆட்சிக்கே வரவில்லை. வந்தால்தான் இவர்கள் நிலையும் தெரியும்.
விஜய் உரையெல்லாம் யாரோ எழுதி தருவதாகவும், அவருக்கு ஆலோசனை வழங்க ஒரு குழு இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிது. ஒருவேளை அது உண்மை என்றால் விஜய் தவறாக வழிநடத்தப்படுகிறார் என்றே சொல்ல வேண்டும். இன்னும் 8 மாதம் இருக்கிறது தேர்தலுக்கு, விஜய் இன்னும் நேரடி அரசியலுக்கு வரவில்லை. அதை அவர் செய்ய தவறும்பட்சத்தில் அவரும் மற்றவர்களை போல காணாமல் போய்விடுவார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.