

தமிழக அரசியல் களத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகளும், கட்சித் தாவல் குறித்த யூகங்களும் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளன. இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளருமான ஜே. சி. டி பிரபாகர் விஜய்யின் முன்னிலையில் இன்று தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார்.
ஏற்கனவே அதிமுகவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்து கொண்டு விஜய்யின் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்து நடத்தி வருகிறார். மேலும் திமுகவின் கழக பேச்சாளராக இருந்த நாஞ்சில் சம்பத்தும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.
இதனை தொடர்ந்து சில முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தவெக -விற்கு பலம் அதிகரித்து கொண்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. மேலும் செங்கோட்டையன் ஏற்கனவே தனது அரசியல் அனுபவத்தை வைத்து தவெக வில் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது அவருடன் சேர்ந்து ஜே. சி. டி பிரபாகரும் செயல்படப் போகிறார் என சொல்லப்படுகிறது.
சமீபத்தில் ஓ. பன்னீர் செல்வம் தவெக வில் இணைய உள்ளார் என்று தகவல்கள் பரவி வந்த நிலையில் மதுரை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய போது அவரிடம் ‘ஓபிஎஸ் தவெக வில் இணைய உள்ளாரா?’ என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “அதிருப்தியில் இருக்கும் தலைவர்கள் யாரும் அத்தகைய முடிவை எடுக்கும் சூழ்நிலையில் இல்லை” என்று கூறி ஓபிஎஸ் தவெ க வில் இணைய போவதில்லை என்பதை உறுதிப்படுத்தி இருந்தார்.
இந்த சூழ்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவில் செயல்பட்டு வந்த ஜே. சி. டி பிரபாகர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளது ஓ. பன்னீர் செல்வத்தின் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஓபிஎஸ் அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் விலகி அண்மையில் திமுகவில் இணைத்திருந்தார். இத்தகைய செயல்பாடுகள் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பன்னீர் செல்வத்திற்கு பெரும் பின்னடைவாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.