
சிறுவன் கடத்தல் வழக்கில், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ., புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு ஒதுக்கி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் - தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில், தனுஷின் சகோதரரை கடத்திச் சென்ற விவகாரம் தொடர்பாக, புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே வி குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த போலீசார், பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைது செய்தனர்.
இந்த நிலையில், தன்னை காவல் துறையினர் கைது செய்யக் கூடும் என கூறி, முன் ஜாமீன் கோரி, ஜெகன் மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், விசார்ணைக்கு ஆஜராகும்படி ஜெகன் மூர்த்திக்கு உத்தரவிட்டார். அதேபோல, கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட ஏ.டி.ஜி.பி. ஜெயராமை கைது செய்து விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்படி ஏடிஜிபி ஜெயராமை காவல் துறையினர் விசாரித்து விட்டு விடுவித்தனர். தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து ஏடிஜிபி ஜெயராம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டது.
அதன்படி, ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை, நீதிபதி வேல்முருகனிடம் இருந்து, நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமீன் மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன், நாளைக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.