

ஜெயிலர் 2 டிக்கெட் முன்பதிவில் மட்டுமே 70 கோடி ரூபாய் வசூல் ஆகியிருந்தது. இதனால் மிகப் பெரிய ஓப்பனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. முதல் நாள் முடிவில் வசூல் 140 கோடி ரூபாயாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, 2026-ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படம் விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன். அதனைத் தொடர்ந்து சூர்யாவின் கருப்பு வெளியானது. ஆனால், இந்த இரண்டு படங்களுமே 350 கோடி ரூபாய் வசூலைக் கடக்கவில்லை.
இந்த நிலையில், ஜெயிலர் 2 அதன் முந்தைய சாதனையான 604 கோடி ரூபாய் வசூலைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
76 வயதிலும் புதிய வரலாற்றைப் படைத்துள்ளார் ரஜினிகாந்த். 50 ஆண்டுகளுக்கு முன்பு தலைவர் படத்துக்கு என்ன கொண்டாட்டமும் கொதிப்பும் இருக்குமோ, அதை அப்படியே இன்றும் பார்க்க முடிந்தது. அந்த ஆராவின் (Aura) எல்லை தமிழகத்தைத் தாண்டி உலகம் முழுவதும் விரிவடைந்திருக்கிறது என்பதையே விமர்சனங்கள் காட்டுகின்றன.
பேஸ்புக் பயனர் ஒருவர்,
"The real Superstar show!
கடந்த கால் நூற்றாண்டில் சிறந்த ரஜினி படம்.
Surprisingly, இது நெல்சன் படமும் கூட. நியாயமாக, முதல் பாகத்தின் அசுர வெற்றி நெல்சனுக்கு மிதப்பையே தந்திருக்க வேண்டும். ஆனால், சின்சியராக உழைத்து, அப்பாகத்தின் அத்தனை குறைகளையும் நிவர்த்தி செய்திருக்கிறார். குறிப்பாக, இம்முறை கேமியோக்கள் வெறும் ஜிகினா வேலை அல்ல; பொருத்தமானவை.
குருதிப்புனல் படம் பார்த்துவிட்டு, அதன் மூலப் படமான Drohkaal-ஐ இயக்கிய கோவிந்த் நிஹ்லானி சொன்னது: 'The remake that is original.' அப்படி, 'The sequel that is better than the original' — ஜெயிலர் 2!" எனக் கூறியுள்ளார்.
ஜெயிலர் திரைப்படம் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதற்கு அடுத்த ஆண்டு வெளியான வேட்டையன் திரைப்படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்தார் ரஜினிகாந்த். அந்தத் திரைப்படம் 254 கோடி ரூபாய் வசூல் செய்தது.
அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கூலி திரைப்படம் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இப்படம் 518 கோடி ரூபாய் வசூல் செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், முந்தைய படங்களின் வசூல் சாதனைகளை ஜெயிலர் 2 முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முதல் 100 கோடி ரூபாய் திரைப்படமும், 500 கோடி ரூபாய் வசூல் செய்த திரைப்படமும் ரஜினிகாந்தின் படங்களாகவே இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள ரசிகர் ஒருவர், அதேபோல ஜெயிலர் 2, 1,000 கோடி ரூபாய் வசூல் செய்யும் படமாக இருக்கும் என சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் நடித்துள்ள பிற மொழி சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் பொருத்தமான கேமியோ கதாபாத்திரங்களில் வருவதால், இந்தியா முழுவதும் இப்படம் வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்