

இன்று சட்டமன்றத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மானியக் கோரிக்கை மீதான முதலமைச்சரின் பதிலுரை நடைபெற்றது.
பதிலுரைக்குப் பிறகு தங்களுக்கு பேச அனுமதி தர வேண்டும் என்று திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சியினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில், வெளிநடப்பு குறித்து செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா, முதலமைச்சரைச் சாடியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, "மாண்புமிகு தமிழக முதலமைச்சருடைய பதிலுரை அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்தப் பதிலுரைக்கு முன்பு, நான் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதும், மு.க. ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதும், அவர்களும் காவல்துறைக்குப் பொறுப்பாக சட்டமன்றத்தில் பதிலுரை அளித்திருக்கிறார்கள். அதில் ஒரு மரபு இருக்கும். எதிர்க்கட்சியினர் விமர்சித்திருக்கிறார்கள், விவாதித்திருக்கிறார்கள்.
ஆனால், இன்று தமிழக முதலமைச்சருடைய பதிலுரை என்னவென்றால், அதையும் தாண்டி எதிர்க்கட்சியை விமர்சிப்பதாக அமைந்துள்ளது. முதலமைச்சருடைய பதிலுரைக்குப் பிறகு, எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு அதற்குத் தகுந்த கேள்விகளை எழுப்புவதற்கு சபாநாயகர் அனுமதி அளிப்பதுதான் கடந்த காலத்தில் நடைமுறையாக இருந்தது."
"ஆனால், இன்றைக்கு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று சொன்ன பிறகும், பதிலுரைக்கு வாய்ப்பளிக்காததால், சட்டமன்ற நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட இந்த நடவடிக்கையைக் கண்டித்து, மனிதநேய மக்கள் கட்சி சார்பாக நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்" எனப் பேசினார் அவர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்