

தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தனது சகோதரர் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரை காரணம் காட்டி தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். அதற்கு விலக்கு அளிக்க முடியாது என தெரிவித்துள்ள புதுச்சேரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கில் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் வரும் ஜூலை 10-ஆம் தேதி கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரிய வில்சன், தற்போதைய தமிழக நிதி அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி தொழில் போட்டி காரணமாக, புதுச்சேரி எழில் நகரில் வசித்து வந்த தனது உடன் பிறந்த சகோதரர் மரிகிளோத் மற்றும் அவரது மனைவி கேரளின் ஆகியோரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, உருட்டுக்கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இந்த சம்பவம் அவர் அரசியல் தொடக்கத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த அவரின் சகோதரர் மரி கிளோத் மற்றும் அவரது மனைவி கேரளின் ஆகியோர் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல், தாக்குதல், சொத்திற்கு சேதம், ஆபத்தான ஆயுதத்தால் காயம் ஏற்படுத்துதல், பெண்ணின் மானத்தை அவமதித்தல், கொலை மிரட்டல் மற்றும் கூட்டுச் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக பலமுறை வாய்தா வழங்கப்பட்ட போதிலும், அமைச்சர் மரிய வில்சன் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதனிடையே, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றப்பத்திரிகையை நேரில் பெற்றுக் கொள்வதற்காக இன்று புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி சேரலதன் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. ஆனால், தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால் நேரில் ஆஜராக இயலாது என தெரிவித்து, மேலும் அவகாசம் கோரி அமைச்சர் மரிய வில்சன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி சேரலாதன், அமைச்சர் தரப்பின் கோரிக்கையை கடுமையாக விமர்சித்தார். "ஏற்கனவே சட்டப்பேரவை கூட்டத் தொடரை காரணம் காட்டி 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் சட்டப்பேரவை மூன்று நாட்கள் மட்டுமே நடைபெற்றது என்பதை தொலைக்காட்சி வாயிலாக தெரிந்து கொண்டேன். அலுவலக பணிகளில் சிரமம் ஏற்படக் கூடாது என்பதற்காகவே விடுமுறை நாளான சனிக்கிழமை அன்று ஆஜராகுமாறு உத்தரவிட்டேன். இருப்பினும், இன்றும் ஆஜராகாமல் மீண்டும் ஜூலை 22-ஆம் தேதி வரை அவகாசம் கோருகிறீர்கள். அன்றும் சட்டப்பேரவை கூட்டத்தைக் காரணம் காட்டி ஆஜராகாமல் தவிர்க்க வாய்ப்புள்ளது" என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.
இதையடுத்து, அமைச்சர் மரிய வில்சன் வரும் ஜூலை 10-ஆம் தேதி கட்டாயம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையின்போது, அமைச்சர் மரிய வில்சன் வீடியோ கான்ஃபரன்ஸ் வாயிலாக ஆஜராக அனுமதிக்குமாறு அவரது வழக்கறிஞர் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். அதற்கு நீதிபதி மறுப்பு தெரிவித்தார். "இந்த வழக்கில் இதுவரை ஒருமுறை கூட குற்றஞ்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை. குற்றப்பத்திரிகையை நேரில் வந்து பெற்றுக் கொள்வதே சட்ட நடைமுறை. எனவே வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்க முடியாது. கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும்" என்று நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்த உத்தரவால், அமைச்சர் மரிய வில்சன் வரும் ஜூலை 10ம் தேதி புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.